திவ்ய பிரபந்தம்

Home

1.10.5 வெண்கலப் பத்திரம் கட்டி

வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி, * கண் பல செய்த கரும் தழை காலின் கீழ், * பண் பல பாடிப் பல்லாண்டு இசைப்ப பண்டு, * மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமனன் என்னைப் புறம்புல்குவான்.

பெரியாழ்வார் திருமொழி 1.10.5

வெண்கலத்தாலே செய்த பத்திரத்தை (இலை போன்ற வடிவுடையது) தன்னுடைய திருவரையில் கட்டிக்கொண்டு விளையாடி, பல மயில் கண்களை இட்டு சமைக்கப்பட்ட பெருமை தங்கிய குடையாகிற சோலை நிழலின் கீழ், பல ராகங்களால் பாடி, (அனுகூலர்கள்) மங்களாசாசனம் செய்ய, மாவலி வேள்வியில், மாணுருவாய் சென்ற காலத்தில் பூமி முதலிய எல்லா உலகங்கள் அனைத்தையும் திருவடிகளால் அளந்து கொண்டவன், புறம் புல்குவான், அளப்பதற்கு முன் வாமனன் ஆனவன் என்னை புறம் புலகுவான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி மாணுருவாய்‘ (பெரிய திருமொழி 7.8.6) தோன்றிய வாமனன் புறம் புல்குவான் என்கிறார்.

பல பீலி கண்களை இட்டு கட்டின பெரிய குடையாகிற சோலையின் கீழ் என்று பொருள். பீலியினுடைய தழைவால் வந்த குளிர்ச்சியை சொல்கிறது. பல பீலிகண்களை திருமுடியில் அலங்காரமாக தரித்துக்கொண்டு சோலை நிழலில் விளையாடியதை சொல்வதாகவும் கொள்ளலாம்.

முன்னொரு காலத்திலே, வெண்கலத்தினால் செய்த பத்திரத்தை, கட்டி விளையாடி, மாவலியிடம் இருந்து மூவடி இரந்து பல உலகங்களையும் அளந்து தனாதிக்கிக் கொண்ட இந்த கண்ணன் என் முதுகினை கட்டி கொள்கிறான் என்று யசோதை கூறுவதாக அமைந்த பாடல்.

Leave a comment