திவ்ய பிரபந்தம்

Home

1.10.1 வட்டு நடுவே வளர்கின்ற

வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க, * மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தே போல், * சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க என், * குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான்.

சென்ற பதிகத்தில் கண்ணன் ஓடி வந்து தன்னை அணைத்து கொள்ளும் விதத்தை எப்படி யசோதை ஆசைப்பட்டு அனுபவித்தாள் என்று பாடிய ஆழ்வார், இந்த பதிகத்தில் கண்ணன் யசோதையின் முதுகினை பின்னால் இருந்து எப்படி கட்டிக் கொள்கிறான் என்று பாடுகிறார்.

பெரியாழ்வார் திருமொழி 1.10.1

இரண்டு நீல ரத்தின வட்டின் நடுவே வளர்கின்ற மாணிக்கத்தால் செய்யப்பட்ட மொட்டின் (சிறுநீர் கழிக்கும் அவயம்) நுனியிலே அரும்பி முத்துக்கள் போல் சொட்டு சொட்டு என்று (உள்ளில் இருந்து புறப்படுகின்ற ஜல சொட்டுகள்) பல காலும் துளிக்க, எனக்கு பவ்யனான குழந்தையானவன் தானாகவே வந்து என்னை முதுகில் அணைத்து கொள்வானாக, பசு மேய்க்க பிறந்தவன் என்னை முதுகில் அணைத்து கொள்வான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கண்ணன், இந்திர நீலமயமான அரும்பினுடைய முனையில் உண்டாகின்ற முத்தினை போல், சொட்டு சொட்டு என்று சப்தம் வரும் வண்ணம் வந்து, யசோதை அழைக்காமல், தானாகவே வந்து, யசோதையின் முதுகினை கட்டிக் கொள்கிறான் என்று பாடுகிறார். இது ‘ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம்புல்கிய(பெரியாழ்வார் திருமொழி 1.10,10)ல் சொல்லியதற்கு மிகவும் பொருத்தமாக உள்ள பாசுரம்.

Leave a comment