என்ன இது மாயம் என்னப்பன் அறிந்திலன், * முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன, * மன்னு நமுசியை வானில் சுழற்றிய, * மின்னு முடியனே. அச்சோ வச்சோ, வேங்கட வாணனே, அச்சோ வச்சோ.
பெரியாழ்வார் திருமொழி 1.9.8
(திருக்கையில் தான தீர்த்தம் விழுந்தவுடன் திருவடிகளை வளர்த்து அளக்க ஆரம்பிக்க), ‘நீ இப்படி செய்வது மாயமாக இருக்கிறது, என்னுடைய தகப்பன் (நீ இப்படி செய்வாய் என்று முன்பு) அறியவில்லை, (ஆதலால்) யாசிக்கும் பொது இருந்த வடிவையே கொண்டு அளக்க வேண்டும்’ என்று சொன்ன, தான் பிடித்த நிலையிலேயே இருந்தவனான, (மஹாபலியின்) புத்திரனான நமுச்சியை ஆகாயத்தில் சுழற்றி எறிந்தவனாய் விளங்கிய திரு அபிஷேகத்தை உடையவனானவனே, அச்சோ அச்சோ, திருவேங்கடமலையில் வாழ்பவனே அச்சோ அச்சோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘அன்று ஞாலம் அளந்த பிரான், சென்று சேர் திருவேங்கட மாமலை‘ (திருவாய்மொழி, 3.3.7) என்று சுவாமி நம்மாழ்வார் சொன்னது போல வாமனாவதார சேஷ்ட்டிதம் தோன்ற திரு வேங்கட மலைக்கு நிர்வாககனாக இருப்பவனே என்று சொல்கிறார். உலகு அளந்ததால், அடியவர்களுடைய அந்நிய சேஷத்வத்தையும், அவர்களுடைய ‘தான்’ என்ற கர்வத்தையும் அறுத்ததானல் உண்டான பிரகாசம் தோன்ற இருந்த திருஅபிஷேகம் என்கிறார்.
சிறு வடிவான வாமனன் திரிவிக்ரமனாகி உலகை அளந்ததை ஒத்துக்கொள்ளாத மாவலியின் மகனான நமுச்சியை வானில் சூழற்றிய திருவேங்கடத்தில் உறைபவனே என்று கண்ணனை பாடியதை சொல்கிறார். வாமனனாய் வந்து திருமால் மாவலியிடத்தில் தானம் பெற்றுத் திரிவிக்கிரமனாய் வளர்ந்து உலகங்களை அளக்க ஆரம்பிக்கும் போது, மஹாபலியின் பிள்ளையான நமுசி ஓடி வந்து, ‘யாசிக்கும் போதிருந்த உருவத்தை மாற்றி அளப்பது மாயச்செயல், வந்த வடிவத்துடனே அளக்க வேண்டும்’ என்று பிடிவாதமாய் நின்ற நமுச்சியை வானில் சுழற்றி அடித்த மின்னும் கிரீடத்தை உடையவனே, திருமலையில் வாழ்பவனே என்று ஆழ்வார் முடிக்கிறார். நமுசி, த்ரிவிக்ரமனோடு வெகு நேரம் வாதாடி எம்பெருமான் சொன்ன வாதங்களைக் கேளாமல் இருந்த, எம்பெருமான் அவனை சுழற்றி ஆகாசத்திலே விழும்படி செய்த வரலாறு இங்கே கூறப்படுகிறது.
Leave a comment