மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில், * தக்கதி தன் என்று தானம் விலக்கிய * சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய, * சக்கரக் கையனே அச்சோ வச்சோ, சங்கம் இடத்தானே அச்சோ வச்சோ.
பெரியாழ்வார் திருமொழி 1.9.7
மிகவும் பெருத்த, (தானம் கொடுப்பதால் உண்டான) கீர்த்தியை உடைய மஹாபலியின், யாகத்திலே (இந்திரனுக்காக சென்று, ‘கொள்வன் நான், மாவலி மூவடி தா’ என்று மூவடி யாசித்த அளவிலே), இவனுடைய வடிவழகாலும், சொன்ன விதத்தாலும் இவனுக்கு தானம் செய்வது என்று முடிவு செய்த மஹாபலியிடம் ‘இவன் வாக்கும், வடிவும் சாதாரண மனிதர் போல இல்லை, இவன் சர்வேஸ்வரன், தேவ காரியம் செய்ய வந்தான், உன் சர்வத்தையும் அபகரிக்க வந்து உள்ளான், இவனுக்கு தானம் செய்வது தகுந்தது அன்று ‘ என்று பூமி தானத்தை தடுத்த (மஹாபலி மற்றும்) அசுரர்கள் குருவான சுக்கிராச்சாரியாரின் (சொற்களை கேட்காமல் மகாபலி தொடர்ந்து தானம் செய்வதில் ஈடுபட, அப்போது தான நீர் கொடுக்கும் பாத்திரத்தின் துளையை அடைக்கும் வண்ணம், வண்டாக மாறிய சுக்கிராச்சாரியாரின்) கண்ணை திருக் கையில் உள்ள பவித்திரத்தின் நுனியாலே கலக்கின திரு ஆழியை கையில் உடையவனே, அச்சோ அச்சோ, ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை இடக்கையில் தரித்தவனே அச்சோ அச்சோ என்று பாடி, இப்படி கைகளும் (சக்கரம், சங்கு) ஆழ்வார்களுமான சேர்த்தியோடு அன்புடன் அணைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ஒரு காலும் திரு வாழிக்கும் திரு பாஞ்சஜன்யத்திற்கும் பிரிவில்லை என்று அவன் வலக்கையில் திரு ஆழி தோன்றும் போது திரு பாஞ்சஜன்யமும் இடக்கையில் தோன்றும் படி உள்ளது என்கிறார்.
(கண் முதலிய) இந்திரியங்களைக் கவர்ந்து கொள்கின்ற (மநோஹரமான) வாமன ப்ரம்மசாரி வேஷத்தை உடைய ‘புலங்கொள் மாணாய் (திருவாய்மொழி 1,8,6), ‘கொள்வன் நான் மாவலி மூவடி தா‘ (திருவாய்மொழி 3.8.9)ல் சொல்லியபடி கேட்கும் போது, சுக்கராச்சாரியார், ‘இவன் தேவ காரியம் செய்ய வந்தான்’ என்று தடுக்க, தீர்த்த பாத்திரத்தில் புகுந்து தடுக்க, ‘கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது ‘ (திருவாய்மொழி 10.6.8) கையில் உள்ள பவித்திரத்தால் கண்ணை கலக்கியது சொல்லப்பட்டது.
மாவலி சக்கரவர்த்தி தானம் குடுக்க தயார் ஆன நிலையில், சிறு பிராமண வடிவில் வந்தது எம்பெருமானே என்று அவனை, அசுரர்களின குருவான சுக்கராச்சாரியார் தடுத்ததை மீறி, மாவலி தானம் கொடுக்க ஆரம்பித்த வேளை, தீர்த்த பாத்திரத்தை ஒரு வண்டின் உருவமேடுத்து சுக்கிராச்சாரியார் மீண்டும் தடுக்க முயற்சிக்க, வாமனனாகிய கண்ணன் அந்த பாத்திரத்தின் அடைப்பை நீக்கும் பொருட்டு, தர்ப்பையால் குத்த, அது சுக்கராசாரியாரின் கண்ணினை கிளறிய ஆயுதமான சக்கரத்தையும், சங்கினையும் உடைய கண்ணனே என்று யசோதை கொஞ்சுவதாக ஆழ்வார் பாடுகிறார்.
Leave a comment