துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட, * மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட, * பின்ன இவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று, * அன்னம் தான் ஆனானே அச்சோ வச்சோ அருமறை தந்தானே அச்சோ வச்சோ.
பெரியாழ்வார் திருமொழி 1.9.10
நிரந்தரமான அஞ்ஞானம் ஆகிற பெரிய இருள் பரவி உலகத்தை மூடும்படியாக அனாதியான நான்கு வேதங்கள் முழுவதும் மறைந்திட, பின்பு இந்த உலகத்தில் உண்டான பெருத்த இருளானது நீங்கும்படி அக்காலத்திலே ஹம்சமாய் வந்து தோன்றியவனே, அச்சோ அச்சோ, சிறந்த வேதத்தை தந்து அருளியவனே அச்சோ அச்சோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.
பிரமன் உறங்கிக்கொண்டு இருக்கும் போது, நான்கு வேதங்களையும் சோமுகன் என்ற அசுரன் கவர்ந்து பிரளய வெள்ளத்திற்குள் மறைந்துவிட, எம்பெருமான் ஒரு மீனாக திருஅவதாரம் செய்து, அந்த அசுரனை கொன்று அவன் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டு, அன்னபறவையாக தோன்றிப் பிரமனுக்கு உபதேசித்த கண்ணனே அச்சோ அச்சோ என்று பாடுகிறார்.
Leave a comment