போர் ஒக்கப் பண்ணி இப்பூமிப் பொறை தீர்ப்பான், * தேர் ஒக்க ஊர்ந்தாய் செழுந்தார் விஜயற்காய், * கார் ஒக்கும் மேனிக் கரும்பு ஏருங் கண்ணனே, * ஆரத் தழுவா வந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போர் ஏறே அச்சோ வச்சோ.
பெரியாழ்வார் திருமொழி 1.9.6
இந்த பூமியின் பாரத்தை ஒழிப்பதற்காக (வடமதுரையில் அவதரித்தது; திருஅவதார பயன் கருதி, ‘பாண்டவர்களுக்கு ஒரு கோல் குத்தும் நிலமும் கொடோம்’ என்று வெட்டி வார்த்தைகள் சொன்ன), துரியோதனாதிகளை யுத்ததிற்கு வரும் வண்ணம் செய்து, (அதர்மிகளை யுத்த பூமியில் கொன்று), செழுமை தாங்கிய தும்பை மாலையை உடைய விஜயன் என்ற அர்ஜுனனுக்கு உதவியாய், (ஆயுதம் எடுக்க ஒண்ணாது என்பதால் சாரதியத்தை அதிகரித்து), அவன் தேரை எதிரிகள் தேருக்கு சமமாக நடத்தியவனே, (அவை கண்களிலும் திருமேனி வடிவிலும் பிரதிபலிக்கும்படி), மேகத்தை ஒத்த திருமேனியை உடையவனாய், கறுத்து பெரிய கண்களை உடையவனே, அருகே வந்து, முழுமையாக தழுவி அருள வேண்டும், அச்சோ அச்சோ, இடை குலத்தில் பிறந்து யுத்தத்தில் ரிஷபம் போல கர்வத்துடன் நின்றவனே, அச்சோ அச்சோ, அன்புடன் தழுவுவாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மகாபாரத யுத்தத்தில் துர்யோதன் பக்கதிற்கு பதினொரு படைகளையும் பாண்டவர்களுக்கு ஏழு படைகளையும் இருந்தாலும் இரு பக்கமும் சமமாக இருக்கும் படி கண்ணன் செய்தார் என்கிறார்.
‘கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர், எல்லாச் சேனையும் இருநிலத் தவித்த வெந்தாய்‘ (திருவாய்மொழி 3.2.3)ல் சொல்லியபடி கையில் ஆயுதம் எடுக்காமல், சாரதித்துவம் மட்டும் செய்து அதர்மிகளை யுத்த களத்தில் கொன்று பூமி பாரத்தை ஒழித்தான் என்கிறார்.
கார் ஒக்கும் மேனிக் கரும்பு ஏருங் கண்ணனே என்பது ‘கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப் பெரிய வாய கண்கள் ‘ (அமலனாதிபிரான் 8)ல் சொல்வதைப் போல அடியவனான அர்ஜுனனை விஜயனாக்கியதால் உண்டானது திருமேனியிலும் கண்ணிலும் தெரியுமாறு நின்றான் என்கிறார்.
பகைவர்களோடு போர் புரியும் போது தும்பைப் பூமாலையும், வெற்றி கொள்ளும் போது வாகைப் பூமாலையும் சூடுவார்கள் என்பது வழக்கம். அதன் காரணமாக அர்ச்சுனன் செழுமையான மாலை அணிந்தார் என்கிறார். ஆயர்களின் அன்புக்கு அடங்கி இருக்கும் போர் தன்மை கொண்ட கண்ணனே என்று கூறுகிறார்.
Leave a comment