கழல் மன்னர் சூழக் கதிர்போல் விளங்கி, * எழல் உற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும், * சுழலைப் பெரிதுடை துச்சோதனனை, * அழல விழித்தானே அச்சோ வச்சோ * ஆழியங் கையனே அச்சோ வச்சோ.
பெரியாழ்வார் திருமொழி 1.9.5
வீரக்கழலை உடைய அரசர்கள் சுற்றும் சேவித்து இருக்க, சூரியனை போல பிரகாசித்துக் கொண்டு, எழுந்து இருக்க முயன்று, மறுபடியும் கர்வத்தாலே தெரியாதபடி அமர்ந்து இருந்து, உன்னை பார்த்து, பொய் ஆசனம் மற்றும் பெரும்பாலும் சூழ்ச்சிகளை செய்த துரியோதனனை, அதி உஷ்ணமாக பார்த்தவனே, அச்சோ அச்சோ, திரு ஆழியை அழகிய திருக்கரங்களில் ஏந்தியவனே, அன்புடன் அணைத்து கொள்வாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணன் பாண்டவ தூதுவனாக துர்யோதனன் அரண்மனைக்கு சென்றபோது, துர்யோதனன் கண்ணனை அவமரியாதை செய்ய எண்ணி, தானும் உறுதியுடன் இருக்க, கண்ணன் எழுந்தருளிய உடன் அரசர்கள் அனைவரும் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவின் ஒளியைக் கண்டு எழுந்து மரியாதை செலுத்த துர்யோதனும் நடுங்கி எழுந்து மரியாதை செய்தான். கண்ணன் தனக்காக இட்டிருந்த ஆசனத்தில் அமரும் போது, அது முறியும் போது, கண்ணன் மிக பெரிய உருவம் எடுத்து துர்யோதன்னை உற்று பார்த்தான். அப்படிபட்ட சக்கர கையனே, அச்சோ அச்சோ என்று சொல்கிறாள்.
Leave a comment