நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்ன, * தேறி அவளும் திரு உடம்பில் பூச * ஊறிய கூனினை உள்ளே ஓடுங்க, * அன்று ஏற உருவினாய் அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோ வச்சோ.
பெரியாழ்வார் 1.9.4
நம் உடம்புக்குத் தக்கதாய் பரிமளம் வீசுகின்ற சந்தனம் கொஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூனியை கேட்க, அந்த கூனியும் மனம் தேறி, திருமேனியில் நல்ல சாந்தை பூச, அப்போது அவள் முதுகில் புறப்பட்டு இருந்த கூனை சரீரத்தின் உள்ளே அழுந்தும்படி, கைகளால் நிமிர்த்தியவனே, அச்சோ அச்சோ, எங்கள் குலத்துக்கு அரசே வந்து, என்னை அன்புடன் அணைக்க வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணன், கம்ஸனைக் கொல்ல பலராமனுடன் புறப்பட்டு திருவடமதுரை சென்றபோது, அங்கு கூனி ஒருத்தியிடம் சிறந்த சந்தனத்தை கேட்டு வாங்கி பூசிக்கொண்ட கண்ணன் உகந்து, அவள் கூனை நிமிர்த்துவிட தனது நுனிக்கையினாலே அவள் மோவாய்க்கட்டையை பிடித்துத் தூக்கிக் கோணல் நீக்கியதைச் சொல்லி, கண்ணனை வரசொல்லும் யசோதையின் குரலை ஆழ்வார் பாடும் பாடல்.
Leave a comment