பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து, * நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு, * அஞ் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த, * அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ.
பெரியாழ்வார் திருமொழி 1.9.3
உன்னை ஒழிய வேறொரு துணை இன்றி இருந்த பாண்டவர்கள் ஐவர்க்கும், தூதனாய் சென்று, பின்பு (பாரத யுத்தத்தில் அவர்களுக்காக) உதவி செய்த கண்ணனே, விஷத்தை கக்கிய காளிய நாகமானது வசித்த கொடுமையான பொய்கையில் புகுந்து, அது அஞ்சும்படியாக, அந்த காளியனுடைய படங்களின் மேல் சென்று குதித்து, (அப்போது அவன் சரணம் புக), அவன் மேல் கருணை கொண்டு அவனை வேறு ஒரு இடத்திற்கு ஓட செய்த அஞ்சன வண்ணனே, மேன்மைக்கு எதிர்தட்டான எளிமையானவனே, இடைக் குலத்து அரசனே, வந்து என்னை அணைத்து கொள்ள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பாண்டவர்களுக்காக தூது சென்று பாரத போர் செய்ததும், காளிங்கன் என்ற பாம்பின் படத்தில் குதித்து நடனம் ஆடி, அவன் மேல் கருணை காட்டி அவனை உயிரோடு வேறு எங்கோ செல்லும்படி விட்டதும் செய்த ஆயர்குலத்தின் எம்பெருமானே, என்று பாடுகிறார்.
நற்பொய்கை என்று சொன்னது விபரீத உதாரணமாய், விஷம் நிறைந்த காளியன் இருந்த பொய்கையானதால் இப்படி கூறப்பட்டது.
நாச்சியார் திருமொழி 4.4 ல் சொல்லியபடி, ‘ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட‘ என்று இந்த சரித்திரத்தை கேட்ட அனுகூலர்களும் என்ன நேர்ந்திடுமோ என்று பயந்தனர். ‘ஐந்தலைய பைந்நாகத்தலை பாய்ந்தவனே ‘ (திருப்பல்லாண்டு 10) என்று சொல்லியபடி, அந்த காளியனுடைய பணங்களில் மேலே சென்று குதித்து நரதானம் செய்தபடியைச் சொல்கிறார்.
அஞ் பணத்தின் மேல் பாய்ந்திட்டு என்று சொன்னது அந்த காளியன் அஞ்சும்படியாக பாய்ந்தான் என்பதாகும்.
Leave a comment