செங் கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டே போல், * பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப, * சங்குவில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய, * அம் கைகளாலே வந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவா வந்து அச்சோ வச்சோ.
பெரியாழ்வார் திருமொழி 1.9.2
செந்தாமரை பூவில், மது உண்ணும் வண்டுகள் போல், சுருண்ட தலைமுடி கேசங்கள் வந்து உன்னுடைய பவளம் போன்ற திருஅதரத்தை மொய்க்கும் வண்ணம் ஸ்ரீ பாஞ்சஜன்யத்தையும், ஸ்ரீ சார்ங்க வில்லையும், ஸ்ரீ நந்தகம் என்ற வாளையும், ஸ்ரீ கௌமோதகீ என்ற கதையையும் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தையும் ஏந்திக் கொண்டு இருக்கின்ற அழகிய கைகளால் வந்து, பரிபூரணமாக தழுவி அருள வேண்டும், வந்து என்னை அன்புடன் அணைத்து கொள்ள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
செங்கமல பூவில் தேன் உண்டும் வண்டுகள் போல நீ விளையாடும் போது தலைமுடி, சிவந்த வாயில் ஒட்டிக்கொள்ளும்படி, பஞ்ச ஆயுதங்களை ஏந்தும் உன் கைகளை தட்டி கொண்டு எனக்கு மகிழ்ச்சி தரும் வண்ணம் கட்டிக்கொள்ள வேண்டும் என்று யசோதை வேண்டுவதாக பாடுகிறார்.
Leave a comment