பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம் கட்டி, * தன்னியல் ஒசை சலம் சலம் என்றிட * மின்னியல் மேகம் விரைந்து எதிர் வந்தாற் போல், * என் இடைக் கோட்டரா அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோ அச்சோ
சென்ற பதிகத்தில் கண்ணனின் சிறு வயது லீலையான தளர்நடையின் அழகினை ரசித்ததாக யசோதை சொன்னதை, பெரியாழ்வார் விவரமாக சொல்லியதை பார்த்தோம். இந்த பதிகத்தில், அவன் ஓடி வந்து தன்னை அணைத்து கொள்ளும் விதத்தை எப்படி யசோதை ஆசைப்பட்டு அனுபவித்தாள் என்று ஆழ்வார், கண்ணன் இந்த அவதாரத்தின் பிற்காலங்களில் செய்த லீலைகளையும், மற்ற அவதாரங்களில் செய்த லீலைகளையும் சேர்த்து அனுபவிக்கிறார்.
பெரியாழ்வார் 1.9.1
பொன்னால் பூசப்பட்ட கிண்கிணியையும், திரு நெற்றிச்சுட்டியையும் அந்தந்த இடங்களில் கட்டி, தன் கிண்கிணியின் இயல்பான ஓசையானது ‘சலன் சலன் ‘ என்று ஒலிக்க மின்னலை இயல்பாக உடைய அல்லது மின்னலாலே அழகிய மேகம் ஆனது, கால்கள் படைக்கப்பட்டு, விரைந்து நடந்து, எதிரே வருமாப் போல் என் இடுப்பில் அமர்ந்து கொள்ள ஆசைப்பட்டு, ஓடி வந்து என்னை அணைத்துக் கொள்ள வேண்டும், எனக்கு சுவாமி ஆனவனே, வந்து என்னை அணைத்து கொள்ள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
அச்சோ அச்சோ என்று இரண்டு முறை கூறுவது அதன் மேல் உள்ள அன்பின் மிகுதி தோன்ற கூறுகிறது.
பொன் வடத்தில் கொக்கப்பட்ட கிண்கிணி ஆகையால், சப்தம் ஏற்படுகிறது என்றும், திரு அரையில் சாத்திய கிண்கிணியும் சேவடியில் சாத்திய கிண்கிணியும் சேர்ந்து ஒலிக்கின்றது என்றும் உரையாசிரியர் கூறுகிறார்.
மிகவும் ஒளிவீசுகின்ற ஆபரணங்களை அணிந்து கொண்டுள்ள கண்ணன், யசோதையின் இடுப்பில் ஏறிக் கொள்வதற்காக, ஓடி வருவது, இடிகள் சப்தத்துடன் கூடிய மின்னலை தன்னிடத்தில் கொண்டுள்ள மேகம் விரைந்து ஓடி வருவதை போல உள்ளது என்று சொல்கிறாள். அப்படி கண்ணன் ஓடி வந்து தன் மேல் ஏறிக்கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.
Leave a comment