பக்கம் கருஞ்சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய, * அக் குவடம் இழிந்து ஏறித் தாழ அணியல் குல் புடை பெயர, * மக்கள் உலகினில் பெய்தறியாத மணிக் குழவி உருவின் * தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.
பெரியாழ்வார் திருமொழி 1.8.8
கறுத்த சிறிய மலை அடிவாரத்தில் மேலே அருவிகளானவை ஒளி விடுவதைபோல, (திருவரையில் சாத்தின) வளை மணி வடமானது தாழ்ந்தும் உயர்ந்தும் தொங்கும்படியாகவும் அழகிய அல்குல் பக்கங்களில் அசையும்படியாகவும், உலகத்திலே மனிதர்கள் பெற்று அறியாத மனோகரமான சிறுபிள்ளை வடிவை உடையானவாய் தகுந்த நீலமணி போன்ற திருநிறத்தை உடைய ஸ்ரீ வசுதேவர் திருமகன் தளர் நடை நடவானோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கருநிறத்தையுடைய இடுப்பினில் கட்டிக் கொண்ட வெள்ளை நிற சங்குமணி மாலையானது, தளர் நடை நடக்கும்போது முன்பின்னாக சென்று பிரகாசிப்பது கரிய சிறுமலையில் வெண்மையான அருவி மேடு பள்ளமான இடங்களில் பிரகாசிப்பது போல் உள்ளது. உலகத்தில் மனிதர்கள் அறியாத அழகினை உடைய வாசுதேவரின் குழந்தையான கண்ணன் தளர்நடை நடக்க வேண்டும் என்று வேண்டுகிறாள்.
Leave a comment