திவ்ய பிரபந்தம்

Home

1.8.7 படர் பங்கய மலர் வாய் நெகிழ

படர் பங்கய மலர் வாய் நெகிழப் பனி படு சிறுதுளி போல், * இடங்கொண்ட செவ்வாய் ஊறி ஊறி இற்றிற்று வீழ நின்று, * கடும் சேக்கழுத்தின் மணிக்குரல் போல் உடைமணி கணகணென, * தடந்தாளினை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ.

பெரியாழ்வார் திருமொழி 1.8.7

படர்கின்ற தாமரை மலரானது மலர தொடங்கும் போது, குளிர்ந்த மதுவானது சிறு துளி விழுவது போல, விசாலாமாய் சிவந்த திருப்பவளத்தில் அமிர்தமானது நிரந்தரமாக ஊறி முறிந்து விழும்படி நின்று கடும் ரிஷபத்தின் கழுத்தில் கட்டின மணியின் ஒலியை போல், அரையில் சாத்தின மணியானது கண கண என்று ஒலிக்க, பருத்த ஒன்றோடு ஒன்று ஒத்த திருவடிகளால் ஸ்ரீ சார்ங்கத்தை திருக்கையில் உடையவன் தளர் நடை நடவானோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மலர்ந்த தாமரைப் பூவில் இருந்து தேன்துளி சிறிது சிறிதாக சேர்ந்து பெருகி வழிவது போலத் தனது வாயில் இருந்து வரும் ஜலம் வழியவும், எருது நடக்கும் போது அதன் கழுத்தில் கட்டிய மணி கணகண என்று சப்தம் போடுவது போல இடுப்பில் கட்டிய மணி சப்தமிடும் தளர்நடை நடக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றாள்.

Leave a comment