திவ்ய பிரபந்தம்

Home

1.8.6 ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம்

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்த மைந்த, இரு காலும் கொண்டு அங்கு அங்கு எழுதினாற் போல் இலச்சினை பட நடந்து, பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து, கருகார்க் கடல் வண்ணன் காமர் தாதை தளர் நடை நடவானோ.

பெரியாழ்வார் திருமொழி 1.8.6

கறுத்ததாய் குளிர்ந்து கடல் போன்ற திருநிறத்தை உடையவனாய், மன்மதனுக்கு பிதாவானவன், ஒரு திருவடியில் ஸ்ரீ பாஞ்சஜன்னியமும், மற்றொரு திருவடியில் ஸ்ரீ சுதர்சன ஆழ்வானுமாக உள்ளங்காலில் ரேகையாக பொறித்து சமைந்த இரண்டு அடிகளாலும் அடியிட்ட அந்த இடங்களில் எழுதியதைப்போலே அடையாளம் படும்படி நடந்து பெருகுகின்ற ஆனந்த வெள்ளத்தின் மேல் மேன்மேலும் ஆனந்தத்தை பொழிந்து தளர்நடை நடவானோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பிள்ளையாகிய கண்ணனுக்கு எம்பெருமானின் அடையாளமான சங்கு சக்ர ரேகைகள் உள்ளங்காலில் இருந்தலால் அந்த கால்களை கொண்டு நடக்கும் இடம் எங்கும், சங்கு சக்கர பிம்பம் எழுதியதை போல் உள்ளது என்கிறார். கண்ணன் மன்மதனின் அம்சமாகிய பிரத்யுமனனுக்கு தந்தை என்கிறார். காமனை பயந்த காளை (திருவாய்மொழி 10.2.8 )ல் சொல்லியபடி தன் அழகாலே செருக்குடன் திரியும் மன்மதனுக்கும் மேல் அழகில் ஏற்றம் கொண்டவன் என்கிறார். காமனை பயந்த பின் கண்ணனின் வயது மேலும் குறைகிறது, அதனால் ஆனந்தம் பெருகுகிறது என்கிறார்.

கரிய பெரிய கடல் அல்லது கறுத்துக் குளிர்ந்த கடல் அல்லது காளமேகம் போலவும் கடல் போலவும் உள்ள கண்ணனின் தளர்நடை மேலும் ஆனந்தம் பெருக வழி செய்கிறது என்கிறார்.

Leave a comment