மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய், * பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும், * மின்னில் பொலிந்ததோர் கார் முகில் போலக் கழுத்திணில் காறை யொடும், * தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர் நடை நடவானோ.
பெரியாழ்வார் திருமொழி 1.8.3
மின்னல் கொடியும், தனித்துவம் கொண்டு வெளுத்து இருக்கின்ற சந்திர மண்டலமும் அதை சூழ்ந்த பரிவேஷமும் போல் அரையில் பூண்ட பொற் பின்னலும் அதில் கொக்கப்பட்டு விளங்குகின்ற அரசிலை கோவையும் பொன் வர்ணமான சிற்றாடை இவற்றோடும் மின்னலாலே விளங்கும் கறுத்து இருக்கின்ற மேகம் போல் திருக்கழுத்தில் பூண்ட காறை என்ற ஆபரணத்தோடு பிரகாசமானவனாய் கண்டவர்கள் இந்த்ரியங்களை கவரும் வண்ணம் இருக்கும் கண்ணன் தளர் நடை நடவானோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
குழந்தை கண்ணனின் திருவாபரணங்கள் திருமேனிக்கு சுமை என்ற அளவில் இருக்க, இயற்கையாகவே தனது அழகினால் விளங்குகின்ற ரிஷிகேசன் என்று சொல்லப்படும் எம்பெருமான், தளர் நடை நடவானோ என்று யசோதை கேட்கும் பாடல்.
Leave a comment