திவ்ய பிரபந்தம்

Home

1.8.2 செக்கரிடை நுனிக் கொம்பில்

செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறுபிறை முளை போல, * நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக, * அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன், * தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.

பெரியாழ்வார் திருமொழி 1.8,2

சங்குமணி வடத்தை திருவரையில் தரித்து கூர்மாகாரமான ஆபரணத்தை திருக்கழுத்தில் சாத்திக் கொண்ட, திரு அனந்ததாழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகின்ற, தகுதியான நீலமணி போன்ற வடிவை உடையவனாய், ஸ்ரீ வசுதேவர் திருமகனான கண்ணன், செக்கர் வானத்திலே நுனிக் கிளையிலே தோன்றும்படி விளங்குகின்ற இளம் சந்திரனுடைய முனை போல் சிரிக்கும்படி மிகவும் சிவந்திருந்துள்ள அதரமாகிற உன்னத ஸ்தானத்தின் மேலே குளிர்ந்ததாய் வெளுத்துள்ள திருமுத்துக்கள் (முளைவிடும் பற்கள்) விளங்கும்படி தளர் நடை நடவானோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

புன்முறுவல் செய்து கொண்டே தளர்நடை நடக்க வேண்டும் என்று யசோதை வேண்ட, கண்ணன் தளர் நடை நடந்து, சிவந்த வாயில் வெளுத்த சிறிய பல் பிரகாசிப்பது புன்முறுவல் செய்வது என்பது செவ்வானத்தில் தோன்றுகின்ற குளிர்ந்த சிறு பிறை போல் உள்ளது என்கிறார்.

Leave a comment