திவ்ய பிரபந்தம்

Home

1.8.1 தொடர் சங்கிலிகை சலார்பிலார்

தொடர் சங்கிலிகை சலார்பிலார் என்னத் தூங்கு பொன் மணி ஓலிப்ப, * படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல், * உடங்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடை மணி பறை கறங்க, * தடந்தாளிணை கொண்டு சாரங்கபாணி தளர்நடை நடவானோ.

சென்ற பதிகத்தில் சிறு வயது கண்ணனை சப்பாணி கொட்ட சொன்ன யசோதை வார்த்தைகளை சொன்ன ஆழ்வார் இந்த பதிகத்தில் அந்த கண்ணனின் தளர் நடை பயிலும் லீலைகளை சொல்கிறார்.

பெரியாழ்வார் திருமொழி 1.8.1

ஸ்ரீ சார்ங்கத்தைக் கையில் உடையவன், சங்கிலியாலான விலங்கானது சலார், பிலார் என்று சப்தம் செய்வதும், பொற்கயிற்றில் தொங்குகின்ற மணியானது, சப்தம் செய்வதும், உண்டாக்கப் பட்ட மூன்று இடங்களில் இருந்தும் மதநீரானது அருவி குதித்தது போல, பெருகும்படியாக யானையானது மெள்ள நின்று நடப்பது போல, திருவடி சதங்கைகள் ஒன்றோடுஒன்று கூடி சப்தம் செய்வதும், திரு அரையில் சாத்திய மணியானது நழுவி (கீழே திருவடி சதங்கைகளுடன் சேர்ந்து) பறை போல் ஒலிக்கும் படியாகவும் பருத்து ஒன்றுக்கொன்று ஒத்த திருவடிகளால் தளர்நடை நடவானோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

தளர்நடை என்பது திருவடிகள் ஊன்றி நடக்கும் பருவம் இல்லாமல், நடை கற்கும் பருவம் ஆதலால் தவறி தவறி நடக்கும் நடை ஆகும்.

கண்ணன் தளர் நடை நடக்கும் போது, காலில் அணிந்துள்ள சதங்கைகள் கிண்கிணென்று சப்தமிடவும், இடையில் கட்டிய சிறு மணிகள் பறை போல் ஓலிக்கவும், நடக்கின்ற களைப்பினால் வேர்வை பெருக, அது யானை, மதம் மிகுதியால் கட்டுகளை அறுத்து கொண்டு காலில் இட்ட சங்கிலி சலார் பிலார் என்று சப்தம் இட்டு, பொன் கயிற்றினால் கட்டித் தனது இருபுறத்திலும் தொங்கவிட்ட மணிகள் ஒலிக்கவும், மதநீர்பெருகவும் மெல்ல நடக்கும் நடை போல் உள்ளது. சார்ங்கம் என்னும் வில்லை கையில் ஏந்திய இந்த சிறு பிள்ளை, தனக்கு தானே ஒப்பாக உள்ள திருபாதங்களை நன்றாக ஊன்றி நடக்காமல், தட்டு தடுமாறி நடக்கும் தளர் நடை என்று யசோதை சொல்வதாக ஆழ்வார் அனுபவிக்கும் பாடல்.

சாரங்கம் என்பது ஈஸ்வர அடையாளம் என்றும், அவதரிக்கிறபோதே ஈஸ்வர சின்னங்கள் தோன்றும்படி வந்து அவதரித்தது சொல்லப்பட்டது.

Leave a comment