அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே, * வளர்ந்திட்டு வான் உகிர்ச் சிங்க உருவாய், * உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வு அகலம், * பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலை உண்டானே சப்பாணி.
பெரியாழ்வார் திருமொழி 1.7.9
நரசிங்கபிரானை உள்ளே வைத்துக் கட்டிய தூண் என்று சொல்லிவிட முடியாதபடி தானே பார்த்துக் கட்டினது என்று எண்ணிய இரணியனின் அகலமான மார்பினை, நரஸிம்ஹத்தினுடைய கோபத்தில், கை விரல் நகங்களால் பிளந்த கைகளால் சப்பாணி கொட்டு என்று சொல்கிறாள்.
‘தாயாய் வந்த பேயுயிரும் தயிரும்‘ (பெரிய திருமொழி 1.5.6)ல் குறிப்பிட்டபடி, பேய் முலை உண்டானே என்று சொன்னது பூதனையை சொல்கிறது.
ஹிரண்யன் அளந்து நட்ட ஸ்தம்பத்தை அவன் தானே சீறி உதைக்க, அந்த ஸ்தம்பத்திலே, (அவன் அடித்த இடத்திலேயே), கத்தி போன்ற கொடூரமான நகங்களை உடைய நரசிம்ம ரூபமாய், வளர்ந்து அவன் நெஞ்சினை, (இப்போதாவது மனம் மாறி இருக்குமோ என்று) பரிசீலித்து ஹிரண்யனின் அகன்று இருக்கின்ற மார்பினை கிழித்த கைகளால் சப்பாணி கொட்டு; பூதனையின் விஷம் தடவின முலையை அவள் உயிரோடு உண்டவனே சப்பாணி கொட்டு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘ கரந்தெங்கும் பரந்துளன்‘ (திருவாய்மொழி 1.1.7)ல் சொல்லியபடி ‘எங்கும் உளன்’ என்று சொன்ன பிரகலாதனின் வார்த்தையை மெய்ப்பிக்க, ‘பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப்‘ (பெரிய திருமொழி 2.3.8)ல் சொல்லியபடி ஹிரண்யன் சீற்றத்தில், அவன் எல்லா இடத்திலும் இருந்த போதிலும், அவன் அடித்த இடத்திலே தோன்றியது சொல்லப்பட்டது.
‘பரிய இரணியன்‘ (பெரிய திருமொழி, 9.4.4) மற்றும் (பெரிய திருமொழி 1.5.7) கூறியபடி, பருத்து வளர்ந்த உருவை உடையவனான இரணியன், எந்தவிதமான ஆயுத்தத்தினாலும் கொல்லப்படக்கூடாது என்றும், தேவாதி தேவர்கள், மற்றும் நான்கு வகை ஜாதி உள்ளவற்றில் ஒன்றினாலும் கொல்லப்படக்கூடாது என்றும் பிரமன் கொடுத்த வரத்திற்கு விரோதம் வராமலும் ஒளி உடைய நகங்கள் கொண்ட நரசிம்மமாய் தோன்றியது கூறப்பட்டது. ‘சிரம் பற்றி, முடி இடிய கண் பிதுங்க வாய் அலற தெழித்தான்‘(பெரியாழ்வார் திருமொழி 4.9.8) என்றதன் படி, ஒருவேளை பயத்தினால் நெஞ்சு இளகி மனம் மாறக்கூடுமோ என்று பரிசீலனை செய்து கொன்றது சொல்லப்பட்டது.
நரஸிம்ஹம்மமுடைய கோபாக்கினியாலும், இரணியனின் இரத்தத்தில் கலந்த பயாக்கினியாலும் பிறந்த பரிதாபத்தாலே அக்னி முகத்தில் பொன் போலே உருகி, பதம் செய்து ஒளி விடுகை விவரிக்கப்பட்டது.
‘உடலகம் இரு பிளவா, கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவனே‘ (பெரிய திருமொழி 5.3.2)ல் சொல்லியபடி, உடல் இரு பிளவாகக் கூடிய வகையில் நீண்ட, கூரிய நகங்களை படைத்தவனே என்றும் அதனை அனாயாசமாக செய்தவனே என்றும் சொல்கிறது.
Leave a comment