குரக்கினத்தாலே குரைகடல் தன்னை, * நெருக்கி அணைகட்டி நீள்நீர் இலங்கை, * அரக்கர் அவிய அடு கணையாலே, * நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே சப்பாணி.
பெரியாழ்வார் திருமொழி 1.7.8
சுதர்சன சக்கரத்தை கையில் ஏந்தியவனே, வானரப் படைகளை கொண்டு கடலில் பாலம் கட்டின கைகளாலே சப்பாணி கொட்ட வேண்டும் என்று யசோதை சொல்லும் பாடல்.
ஆழத்தாலும் பரப்பாலும் அலைகள் கூட்டத்தை கொண்டு கோஷிக்கின்ற சமுத்திரத்தை இரண்டு பக்கமும் தேங்கி போகும்படி நடுவே அணை கட்டியதை சொல்கிறார். ‘நீள் கடல் சூழிலங்கை‘ (திருவாய்மொழி 1.6.7) என்பதை மேற்கோள் காட்டுகிறார்.
கோஷம் போடுகின்ற கடலை, (நீருக்கு அஞ்சி உயர் நிலங்களில் வாழும்) வானர இனத்தாலே இரண்டு பக்கமும் நீர் தேங்கும்படி (நடுவே) அணையை கட்டி, பரந்த கடலை அகழாக கொண்ட லங்கையில் உள்ள ராக்ஷசர்கள், (இந்த அரண் இருக்க, நமக்கு ஓரு குறையும் இல்லை என்ற செருக்கு) நசிந்து போகும்படி, ஹிம்சிக்கின்ற அம்புகளால் நெருக்கி யுத்தம் செய்த திருக்கைகளால் சப்பாணி கொட்டு, திரு ஆழியானை அழகிய திருக்கைகளில் உடையவனே, சப்பாணி கொட்டு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
Leave a comment