பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை, * இரந்திட்ட கைம் மேல் எறி திரை மோத, * கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க, * சரம் தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்க வில் கையனே சப்பாணி.
பெரியாழ்வார் திருமொழி (1.7.7)
சக்ரவர்த்தித்திருமகன் வானர சேனைகளுடன் புறப்பட்டு கடற்கரையில் அடைந்து, ‘இலங்கைக்கு செல்ல வழி விட வேண்டும்’ என்று அங்கு தர்ப்ப சயனத்தில் படுத்து காத்து இருக்க, தன்னிடம் சரணம் என்று வந்த எம்பெருமான் கைமேல் அலைமோதும்படி ஆதரிக்காமல் இருந்த கடலை , எம்பெருமான் கோபம் கொண்டு, வற்ற செய்ய தனது சாரங்கம் என்ற வில்லினில் அம்பு தொடுத்து விடத் தொடங்கியவுடன் ஸமுத்ரராஜன் அஞ்சி ஓடி வந்து எம்பெருமானை சரணமடைந்து கடல் வடிவமான தன் மேல் அணைகட்டும்படி வழி விட்டான் என்பது வரலாறு. சாரங்கம் ஏந்திய கைகளினால் சப்பாணி கொட்டு என்று யசோதை அழைக்கும் பாடல்.
பரந்து விரிந்து ஆழ்ந்து உள்ள (தெற்கு) சமுத்திரமானது, தன்னை குறித்து சரணாகதி பண்ணிய திருக்கைகளின் மேல் நீர் திவலைகள் படும்படி அலைகளை வீசி நின்று கொண்டு முகம் காட்டாமல் மறைந்து நின்ற சமுத்திரத்தின் நிர்வாககனான வருணன் மேல் அவன் குடல் குழும்பும்படி அம்புகளை ஏவிய திருக்கைகளால் சப்பாணி கொட்டு, ஸ்ரீ சாரங்கம் என்ற வில்லை திருக்கையில் தரித்தவனே சப்பாணி கொட்டு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
Leave a comment