அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை, * மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி * வடம் சுற்றி வாசுகி வன்கயிறாகக் * கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார்முகில் வண்ணனே சப்பாணி.
பெரியாழ்வார் திருமொழி 1.7.10
துர்வாச முனி சாபத்தினால் தாம் இழந்த ஐஸ்வர்யத்தைப் பெறுதற்காக தேவர்கள் உன்னை சரண் அடைந்தபோது, ஆழமான திருபாற்கடலை கடைந்து, மந்திர மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பினை கயிராக கொண்டு கடைந்த கைகளால் சப்பாணி என்று யசோதை கூறுவதாக அமைந்த பாடல்.
தேவர்கள் சரணம் புகுந்த உடன் கம்பீரமான திருபாற்கடல் சமுத்திரத்தை நெருக்கி மந்தர பர்வதத்தை கடையும் மத்தாக நிறுத்தி, வாசுகி என்கிற நாகமாகிற வலிய கயிற்றை, கடைகின்ற கயிறாகச் சுற்றி, (அலைகடல் கடைந்த அப்பன் என்கிற வண்ணம் அமிர்தம் கிளரும்படி), கடைந்து அருளிய கைகளால் சப்பாணி கொட்டிட்டு, கரிய மேகம் போன்ற வர்ணத்தை உடையவனே சப்பாணி கொட்டிட்டு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
Leave a comment