திவ்ய பிரபந்தம்

Home

1.7.1 மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப

மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல், * ஆணிப் பொன்னால் செய்த ஆய் பொன்னுடை மணி, * பேணிப் பவள வாய் முத்து இலங்க பண்டு * காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங் குழல் குட்டனே சப்பாணி.

சென்ற பதிகத்தில், செங்கீரை ஆட கண்ணனை அழைத்த யசோதையின் அனுபவத்தை பாடிய ஆழ்வார், இந்த பதிகத்தில் கண்ணனை சப்பாணி கொட்டுகிற சிறு வயது லீலைகளை காண யசோதை வேண்டியதை இந்த பதிகத்தில் ஆழ்வார் பாடுகிறார்.

பெரியாழ்வார் திருமொழி 1.7.1

சப்பாணி கொட்டுவது என்பது திருக்கைத்தலங்களை தட்டிக் கொண்டு சீய்யும் ஒரு வித நடனம்.

முத்துப்போன்ற பற்கள் விளங்கவும் திருக்கைகளாலே சப்பாணி கொட்ட வேண்டும் என்கிறார்.

மாற்று உயர்ந்த பொன்னால் செய்யப்பட்டதாய், வேலைப்பாட்டில் சிறிதும் குறை காணமுடியாதபடி செய்யப்பட்ட, பழிப்பு அற்ற, பொன் மணிக் கோவையை உடைய அரைவடத்தை கொண்ட, இடுப்பிலே மாணிக்கத்தாலே செய்த கிண்கிணியானது சப்தம் செய்ய, அதனை விரும்பி, பவளம் போன்ற திருவதரமும் திருமுத்துக்களும் பிரகாசிக்கும்படி, (அதாவது, மந்தஸ்மிதம் செய்து கொண்டு), முன்பு பூமியை, (மஹாபலியிடத்தில்) இருந்து நீரேற்று வாங்கி கொண்ட திருக்கைகளாலே சப்பாணி கொட்ட வேண்டும், கறுத்த தலை முடியை உடைய பிள்ளை சப்பாணி கொட்ட வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

என்னுடைய நிர்பந்ததிற்காக இல்லாமல், விருப்பத்தோடு கைகளை தட்டி, உன் திருமேனி குலையாமல், ஒரு நர்த்தனம் செய்ய வேண்டும் என்பது யசோதையின் வேண்டுகோள். மஹாபலியிடம் இருந்து நீர் பெற்ற கை என்று சொன்னதால், தன்னுடைய உடைமையான பூமியை யாசித்து பெற்றதை சொல்லியதால், தன் மேன்மை பாராதே அடியவர்களுக்காக தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டு காரியம் செய்யும் கைகள் என்பது சொல்லப்பட்டது.

Leave a comment