பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு செண்பகமும், பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர, * கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக் , கோமள வெள்ளி முளைப் போல் சில பல் இலக, * நீல நிறத்தழகார் ஐம்படையின் நடுவே, நின் கனி வாயமுதம் இற்று மறிந்து விழ, * ஏலு மறைப்பொருளே ஆடுக செங்கீரை, ஏழு உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே.
பெரியாழ்வார் திருமொழி (1.6.9)
பாலுடன், நெய்யும், தயிரும் (ஆகிய இவற்றை பலகாலம் அமுது செய்வதால்,) அழகிய சந்தனத்தோடு செண்பகம் முதலிய மலர்களும் (ஆகிய இவற்றை பலகாலும் சாத்துகையாலும், ) தாமரையும் உத்தமமான கற்பூரம் ஆகிய இவை கலந்து, ‘கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ‘ (நாச்சியார் திருமொழி, 7.1) என்னும்படியாக பரிமளிக்க அழகிய நற்பவளம் போல அழகிய சிவந்த திரு அதரத்தின் உள்ளே இளையதான வெள்ளி முளை போல உள்ள சில சிறு முத்துக்கள் விளங்க, நீல நிறத்தாலே அழகு படைத்த பஞ்சாயுதத்தின் நடுவே உன்னுடைய கொவ்வை கனி போன்ற வாயில் உறுகிற அமிர்த ஜலம் கசிந்து விழ, நீ செங்கீரை ஆடுக, தகுதியான வேதத்தின் அர்த்தமானவனே அல்லது வேதத்திற்கு அனுரூபமான அர்த்தமே இவன் தான் என்று சொன்னபடி, ஆடுக ஆடுகவே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணபிரான் நெய் பால் தயிர் முதலியவற்றை அமுது செய்வதாலும், சந்தனம் செண்பகம் முதலியவற்றைப் திருமேனியிலே சாத்திக் கொள்வதாலும் அவைகள் நல்ல பரிமளம் கமழ, சில பற்கள் பிரகாசிக்க வாயில் அம்ருதஜலம் விழ செங்கீரையாட வேண்டும் என்று கேட்கிறார்.
Leave a comment