திவ்ய பிரபந்தம்

Home

1.6.7 துப்புடைய ஆயர்கள்

துப்புடைய ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால், தூய கருங்குழல் நல் தோகை மயில் அனைய, * நப்பினை தன் திறமா நல் விடை ஏழ் அவிய, நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே, * தப்பின பிள்ளைகளைத் தன் மிகு சோதி புகத், தனியொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய என், * அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

பெரியாழ்வார் திருமொழி 1.6.7

மிடுக்கை உடையவரான இடையர்களுடைய வார்த்தையை தப்பாமல், ஒரு காலத்திலே அழகியதாய் கறுத்து இருந்து உள்ள தலை முடியை உடையவளாய், நல்ல தோகையை உடைய மயில் போன்ற சாயலை உடையவளான நப்பின்னை பிராட்டிக்காக, கொடுமையில் நன்றான ரிஷபங்கள் ஏழும் மாளும்படியாக, நன்றாக மிடுக்கை உடையவனே, அந்த இடையர்களுக்கு ஸ்வாமி ஆனவனே, கை தப்பி போன வைதிகன் பிள்ளைகளை தன்னுடைய மிகுந்த தேஜா ரூபமான பரமபதத்திலே செல்லும்படியாக தனியே ஒப்பற்ற தேரை நடத்தி அங்கு இருந்து பிள்ளைகளை கொண்டு வந்து தாயோடு கூட்டின என் அப்பனே, எனக்காக செங்கீரை ஆடுக ஆடுகவே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

துப்புடைய என்று சொன்னது, ஏறு தழுவ வல்ல சாமர்த்தியத்தை சொல்கிறது. ரிஷபங்களின் வன்மையும், இவனின் மென்மையும் பார்க்காமல் இவற்றை தழுவ வேண்டும் என்று நெஞ்சு உரமாதலை சொல்கிறது. நப்பின்னை திருமணத்திற்கு ஏழு எருதுகளை அடக்கி கண்ணபிரான் மணந்து கொண்டது.

தப்பின பிள்ளைகளைத் தன் தாயொடு கூட்டிய என் அப்ப என்பது கிருஷ்ண பரமாத்மா ஒரு அந்தணன் வேண்டியபடி அவனுக்கு, பிறந்தவுடன், மாதாவின் கண்ணுக்குக் கூட படாமல், காணாமல் போன அவனுடைய நான்கு பிள்ளைகளையும் பரமபதத்தில் இருந்து மீட்டுக் கொடுத்து, தாயானவள் என் பிள்ளைகள் என்று உச்சி முகந்து எடுக்கும்படி அவளோடு சேர்த்ததை சொல்கிறது.

Leave a comment