திவ்ய பிரபந்தம்

Home

1.6.10 செங்கமலக் கழலில் சிற்றிதழ்

செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில், சேர் திகழாழிகளும் கிண்கிணியும் அரையில், * தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின், பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும், * மங்கல ஐம்படையும் தோல் வளையும் குழையும், மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக, * எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை * ஏழுலகும் உடையாய் ஆடுக ஆடுகவே.

பெரியாழ்வார் திருமொழி 1.6.10

செந்தாமரை மலரை ஒத்த திருவடிகளில், (அம்மலரின்) உள்ளிதழ்கள் போல் சிறுத்து இருக்கின்ற திரு விரல்களில் சேர்ந்து விளங்கும் திருவாழி மோதிரங்களும், திருவடி சதங்கைகளும் (சேவடிக் கிண்கிணி, பெரியாழ்வார் திருமொழி 1.4.4) திருவரையில் சாத்தி இருக்கின்ற பொன் அரை நாணும் தாளை உடைத்த நல்ல பூவோடு மாதளம் பூவோடு, (உடையார் கன மணியோடு ஒண் மாதளம் பூ, பெரியாழ்வார் திருமொழி 1.4.2 ) நடுநடுவே கலந்து கட்டிய பொன் மணிக்கோவையும் மோதிரங்களும், மணிகட்டில் சாத்திய சிறு பவள வடமும், மங்களகரமான பஞ்சாயுதமும், திருத்தோள் வளைகளும், காது குழையும், மகர குண்டலங்களும், திருச்செவி மடல் மேல் சாத்தின வாளிகளும் திரு நெற்றிச் சுட்டியும் அமைந்து விளங்க எங்கள் வம்சத்திற்கு ராஜாவானவனே ஆடுக, செங்கீரை ஆடுக ஆடுகவே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கண்ணபிரான் திருமேனியில் அணிந்துள்ள ஆபரணங்களை கூறி அனுபவிக்கிறார். 

Leave a comment