திவ்ய பிரபந்தம்

Home

1.6.11 அன்னமும் மீன் உருவும் ஆளரியும்

அன்னமும் மீன் உருவும் ஆளரியும் குறளும், ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே, * என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை, ஏழு உலகும் உடையாய் ஆடுக வாடுகவென்று, * அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு , ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ், * இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில், எண் திசையும் புகழ்மிக்கு இன்பம்அது எய்துவரே.

பெரியாழ்வார் திருமொழி 1.6.11

ஹம்சமாகவும், மீனாகவும், நரசிம்மமாகவும், வாமனனாகவும், ஆமையாகவும் (ஆக இப்படி எல்லாம்) வந்து அவதரித்தவனே, இடையர்களுக்குத் தலைவனானவனே, என் துன்பத்தை நீக்கினவனே, செங்கீரை ஆடி அருள வேண்டும். ஏழு உலகங்களுக்கும் சுவாமி ஆனாவனே, ஆட வேண்டும், நீ ஆட வேண்டும், என்று அன்னம் போன்ற நடை அழகு உடையவளாய், மடப்பத்தை உடையவளான யசோதை பிராட்டி உகந்து சொன்னவற்றை, ஸமர்த்தனான புகழை உடைய ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த பட்டர் பிரான் அருளிச் செய்த இனிய இசையை உடைய தமிழ் மாலைகளான இந்த பத்து பாடல்களையும் ஓத வல்லவர்கள் இந்த உலகத்தில் இருக்கும் போதே எட்டு திசைகளிலும் புகழையும், மிக்க சுகத்தையும் பெறுவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இப்படி பல அவதாரங்களை சொன்னது, அடியவர்களை காப்பாற்றுவதற்காக, அசாதாரணமான அழகினை கொண்ட தன் திவ்ய விக்ரகத்தை அழிய மாற்றிக்கொண்டு, பலவித குணங்களால் ரக்ஷிக்கும் பெருமை என்பது சொல்லப்படுகிறது. இவை போல இல்லாமல் பூ பாரம் போக்குவதற்காக இடையர்களுக்கு தலைவனாக அவதரித்தவனே என்கிறார். எல்லா பக்கங்களில் இருந்தும் உனக்கு என்ன தொல்லை வருகிறதோ என்று என்னுடைய பயன்களை உன்னை நோக்குவதால் போக்கியவனே என்பதை என் அவலம் களைவாய் என்று சொல்கிறார்.

மது கைடபர்களைக் கடலில் கொன்று வேதங்களை மீட்டுக் ஹம்ஸ அவதாரதம், பிரமனுக்கு உபதேசித்தது. நான்கு வேதங்களையும் சோமுகன் என்ற அசுரன் கவர்ந்து கொண்டு பிரளய வெள்ளத்தினுள் மறைந்து செல்ல திருமால் ஒரு பெருமீனாகத் அவதரித்து அவ்வசுரனை கொன்று வேதங்களை மீட்டு பிரமனுக்குக் கொடுத்தது என்பவை சொல்லப்பட்டுள்ளன.

Leave a comment