திவ்ய பிரபந்தம்

Home

1.6.4 வானவர் தாம் மகிழ வன் சகடம்

வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள, வஞ்ச முலைப் பேயின் நஞ்சு அமுது உண்டவனே, * கானக வல் விளவின் காய் உதிரக் கருதி, கன்று அது கொண்டு எறியும் கருநிற என் கன்றே, * தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன், என்பவர் தாம் மடியச் செருவதரச் செல்லும் * ஆனை எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

பெரியாழ்வார் திருமொழி (1.6.4)

தேவர்கள் மகிழ்ச்சி அடையும்படி, வலிமையுள்ள சகடாசுரன் உருளும்படி செய்தவனை, வஞ்சனை உடைய பூதனையின் முலையின் மேல் இருந்த விஷத்தை அமிர்தமாக அமுது செய்தவனை, காட்டில் உள்ள வலிமையான விளா மர காய்கள் உதிரும்படி, கன்றாக இருந்த தேனுகாசுரனை கையில் கொண்டு, தூக்கி எறிந்த, கறுத்த நிறத்தை உடையவனே, என்னுடைய கன்று போன்றவனே, தேனுகாசுரனும், முராசுரனும், பிரபல கொடியவனான நரகாசுரனும் என்று சொல்லப்படுகிற எல்லோரும் இறக்கும்படி யுத்தத்திலே பெருமையுடன் / கர்வத்துடன் உள்ள யானையானவனே, எனக்காக செங்கீரை ஆடுக ஆடுகவே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

விளாமரமாய் நின்ற கபித்தாஸுரன் மீது கன்றாயிருந்த வத்ஸாஸுரனை விட்டெறிந்து இரண்டையும் ஒன்றாக முடித்தான்.

தேனுகன், கழுதையான வடிவைக் கொண்டு காட்டுக்குள்ளே கண்ணனை முடிப்பதற்காக வந்த அசுரன். கண்ணன் அந்த கழுதையைச் சுழற்றி பனைமரத்தின் மேலெறிந்து அழித்தான்.

கண்ணபிரான் பூமிதேவியின்  அம்சமான ஸத்யபாமையுடனே சக்ராயுதத்தை ப்ரயோகித்து முரன் மற்றும் நரகாஸுரனையும் அழித்தான்.

அடியவர்களிடத்தில் அன்பு கொண்டு இருப்பதனால், கன்று போல என்று சொல்கிறார். இப்படி விரோதிகளை, பருவம் நிரம்புவதற்கு முன்பே அழித்தது, பூமி பாரத்தை குறைப்பதற்காகவே என்றும் அதனால் கண்ணனின் மேனி மிளிர்கின்றது என்றும் சொல்கிறார்.

Leave a comment