திவ்ய பிரபந்தம்

Home

1.6.5 மத்தளவும் தயிரும் வார் குழல்

மத்தளவும் தயிரும் வார் குழல் நன் மடவார், வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு, * ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை, ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய், * முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன் முன், முன்ன முகத்தணியார் மொய்குழல்கள் அலைய * அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

பெரியாழ்வார் திருமொழி 1.6.5

நீண்ட தலைமுடியை உடைய, நன்மையும் மடப்பத்தையும் உடைய, பெண்கள், சேமித்து வைத்த, மத்தாலே கடைவதற்கு தகுந்த, தயிரையும், வெண்ணை உருக்கின நெய்யையும், களவு செய்து, கைகளால் அள்ளி, வயிரார உண்டு, உன்னை துன்பப்படுத்த வேண்டும் என்ற நினைவுடன், ஒரே மனம் கொண்டவர்களாய், சுய வேஷம் தெரியாதபடி, இரட்டை மருத மரங்களாய் வந்து நின்ற அசுரர்களை துடைகளாலும் கைகளாலும் இரண்டு பக்கதிலும் சரிந்து விழும்படி தள்ளின, வெவ்விய வலிமை உடையவனே, அப்பனே, திரு முத்துக்கள் தோன்றுபடி, இனியதான இள முறுவல் பூரணமாக வருவதற்கு முன்னே, முன் முகத்திலே அழகு மிகுந்து நெருங்கி இருக்கின்ற திருகுழல்கள் தாழ்ந்து, ‘வந்து உன் பவள வாய் மொய்ப்ப‘ (பெரியாழ்வார் திருமொழி 1.9.2) என்று சொல்லும்படி குழல் திருப்பவள வாயினை மறைக்கும்படி தாழ்ந்து, அசையும்படி வாராய், செங்கீரை ஆட வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இரண்டு மருத மரங்களாக நிளகூபரன் மணிக்ரீவர் இருவரும் குபேரனுடைய பிள்ளைகள் இருந்தனர். இடைப்பெண்கள் சேர்த்து வைத்த வெண்ணெய் முதலியவற்றைக் களவாடியதற்காக, யசோதையினால் ஓரு உரலோடு கட்டப்பட்டு, அவ்வுரலை இழுத்துக் கொண்டு தவழ்ந்து சென்ற கண்ணன் இந்த இரட்டை மருத மரங்களிடையே சென்று இரண்டு மரங்களையும் விழ செய்த சரித்திரம் சொல்லப்படுகிறது.

Leave a comment