தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன், * கண் துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான், * உண்ட முலைப்பால் ஆறா கண்டாய், * உறங்காவிடில், விண்தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடிவா.
பெரியாழ்வார் திருமொழி (1.5.6)
ஆகாயத்தில் பொருந்திய வடிவில் பெருமை தங்கிய சந்திரனே, (கௌமோதகி ) என்ற கதையோடு திரு ஆழியையும், (ஸ்ரீ சாரங்கம்) என்ற வில்லையும் ஏந்தி நிற்கும் விசாலமான கைகளை உடைய இவன் திருக்கண் வளர்ந்து அருளுவதாக நினைத்து கொட்டாவி விடுகின்றான்; உறங்காவிடில் அமுது செய்த முலைப்பாலானது ஜரிக்காது ; (ஆகையால் நீ) விரைந்து ஓடி வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மனிதர்களுக்கு கொட்டாவி வந்தால் உறக்கம் வரும். இவன் இப்போது கொட்டாவி விடுவதால், இனித் தூங்கி விடுவான் என்றும், தூங்கினால் இவன் உண்ட பால் செரிக்காது என்றும் அதனால் இவன் உறங்குவதற்கு முன் ஓடிவா என்று அழைக்கிறாள். மூன்று ஆயுதங்களைச் சொன்னது அவற்றை ஸேவித்துப் போகவே என்றும் இவற்றின் திறமைக்கு இலக்காகி விடாதே என்பதை உணர்த்துவதற்காக என்று கொள்ளலாம்.
தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன் என்று சொல்வது மற்ற ஆயுதங்களையும் சேர்த்து சொன்னதாகும். இவற்றை பூ ஏந்தியதை போல எப்போதும் தரித்து இருக்கும் இடம் உடைய திருக்கரங்களை உடையவன். இவை ஆபரணமாகவும் ஆயுதமாகவும் கருதப்படுவதால், இவற்றின் அழகை அனுபவித்து வாழாமல், அவைகளின் வீரியத்திற்கு பலியாகிவிடாதே என்கிறாள்.
Leave a comment