திவ்ய பிரபந்தம்

Home

1.6.2 கோளரியின் உருவங் கொண்டு

கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பியெழக் கூர் உகிரால் குடை வாய், * மீள அவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி மேலை அமரர் பதிமிக்கு வெகுண்டு வர, * காள நன் மேகமவை கல்லொடு, கார் (கால்) பொழியக் கருதி வரைக் குடையாக் காலிகள் காப்பவனே, * ஆள எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

பெரியாழ்வார் திருமொழி 1.6.2

மிடுக்கை உடைய நரசிங்கத்தின் உருவாய் எடுத்துக் கொண்டு ஹிரண்யனின் உடலானது இரத்தம் பொங்கி கிளரும்படி, மறுபடியும் அந்த அசுரனின் மகனான பிரகலாதனை, சத்யவாதி என்று நினைக்கும்படி திருவுள்ளம் பற்றி கூர்மையான நகங்களால் அந்த அசுரனின் உடலை கிழித்தவனே, மேன்மை தங்கிய தேவந்திரன் மிகவும் கோபித்து வரும் சமயம், கறுத்த மேகங்கள் கல்லோடு கூடிய மழையை பொழிய, இந்த மலையே உங்களுக்கு ரக்ஷகம், இதற்கு சோற்றை இடுங்கள், என்று முன்பு தான் அருளி செய்ததை நினத்து, அந்த கோவர்தன மலையை குடையாகக் கொண்டு, பசுக்களை காப்பாற்றியவனே, ஒரு கால் ஆடுக, செங்கீரை, ஆடுக ஆடுக என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அசுரன் அளந்திட்ட தூணை (பெரியாழ்வார் திருமொழி 1.7.9) தட்டின போது அங்கே தோன்றி, அவனது மகன் (பிரகலாதன்) சத்யவாதி என்று அவன் புரிந்து கொள்ளுமாறு செய்ததை சொல்கிறது. ஆயுதம் எடுக்க முடியாதது புரிந்து, முழுக் கூர்மையான தன் நகங்களினால், ஓள்ளிய மார்பு உரைக்க (பெரியாழ்வார் திருமொழி 4.9.8) ஊன்றி குடைந்தவனே என்பதை சொல்கிறார். இடையர்களையும், இடைச்சிகளையும் ரக்ஷிக்க என்று சொல்லாது, பசுக்களை ரக்ஷிக்க என்று சொன்னது, அவையே ரக்ஷிக்க வேண்டியதில் பிரதானம் என்பதால் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

ப்ரஹ்லாதனுடைய சொல்லை மெய்ப்பிய்க்க நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி இரணியன் உடலைப் பிளந்தவனே! கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்து காத்தவனே! எனக்கு ஒரு கால் செங்கீரை ஆடு என்கிறாள்.

Leave a comment