திவ்ய பிரபந்தம்

Home

1.6.6 காய மலர் நிறவா கருமுகில் போலுருவா

காய மலர் நிறவா கருமுகில் போலுருவா, கானக மாமடுவில் காளியன் உச்சியிலே, * தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா, துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே, * ஆயம் அறிந்து பொரு வான் எதிர் வந்த மல்லை, அந்தரம் இன்றி அழித் தாடிய தாளிணையாய், * ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

பெரியாழ்வார் திருமொழி 1.6.6

காயாம் பூ போன்ற நிறத்தை உடையவனே, நீல மேகம் போன்ற வடிவை உடையவனே, காட்டில் பெரிய மடுவின் உள்ளே கிடந்த காளியனை எழுப்பி, அவனுடைய விஸ்தாரமான தலையிலே அழகிய நர்த்தனத்தை செய்த அழகை உடைய என் பிள்ளையானவனே, மதத்தை உடைய குவலயாபீடம் என்ற யானையின் தந்தங்களை சுலபமாக பிடுங்கினவனே, மல்யுத்தம் செய்யும் வகை அறிந்து, யுத்தம் செய்வதற்காக எதிர்த்து வந்த மல்லர்களை உனக்கு ஒரு அபாயமும் இல்லாதபடி அழித்து ‘இன்னம் வருவார் உண்டோ’ என்று கம்பீரமாய் பார்த்து, சஞ்சரித்த திருவடிகளை உடையவனே, ஆயனே, எனக்காக வந்து செங்கீரை ஆடுக, ஆடுகவே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இருட்சியாலும் குளிர்த்தியாலும் காள மேகம் போன்ற நிறத்தை உடையவனே என்கிறார்.

மல் யுத்தம் செய்யும் போது, ஒரு உடல், மற்றொருவர் மீது இடமில்லாமல் பொருந்தும்படி என்றும் தனக்கு ஒரு அபாயம் இல்லாமல் பொருந்தும்படி என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.

காளிங்க நடனம் ஆடியது, குவலயாபீடம் என்ற யானையின் கொம்பு உடைத்தது, மல்லர்களை அழித்தது என்பவை செங்கீரை ஆடும் பருவத்திற்கு வெகுநாள் சென்று நடந்த செய்திகள். ஆழ்வார் எம்பெருமானருளாலே மயர்வற மதிநலம் அருள பெற்றவர் ஆதலால், எதிர்காலத்தில் நடக்கும் செய்கைகளை பாடல்களில் அருளிச் செய்கிறார்.  

Leave a comment