திவ்ய பிரபந்தம்

Home

1.6.1 உய்ய உலகு படைத்துண்ட

உய்ய உலகு படைத்துண்ட மணி வயிறா, ஊழிதோர் ஊழி பல ஆலினிலை அதன் மேல், * பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே, பங்கய நீள்நயனத்து அஞ்சன மேனியனே, * செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதிச், செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக * ஐய எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

சென்ற பதிகத்தில் சந்திரனை ஓடி வா, சீக்கிரம் வா, என்று பலவாறு யசோதை அழைத்ததை பாடிய ஆழ்வார், கண்ணன் அதே பருவத்தில் ஆடக்கூடிய செங்கீரை ஆடுவதை பார்க்க விரும்பும் யசோதையின் குரலாக, மயர்வல மதிநலம் பெற்ற ஆழ்வார், எம்பெருமானின் இந்த திருஅவதாரத்தின் இந்த பருவ, மற்றும் பிற்காலங்களில் நடக்க இருக்கும் லீலைகளையும், மற்ற திருஅவதார குணநலங்களையும், மற்ற நிலைகளின் (பர, வியூக, விபவ, அரச்சா, அந்தரயாமி) பெருமைகளையும் சேர்த்து இந்த பதிகத்தில் பாடுகிறார்.

பெரியாழ்வார் திருமொழி 1.6.1

ஆத்மாக்கள் உஜ்ஜீவைக்காக உலகங்களை சிருஷ்டித்து (உண்டாக்கி) பின்பு அவற்றை தன் வயிற்றில் வைத்து ரக்ஷித்த அழகிய திருவயிற்றை உடையவனே, பல காலங்கள் தோறும் ஒரு ஆலினையின் மேல், (அந்த ஆலிலை அசையாதவாறு அதன் மேல்) மெள்ள யோக நித்திரை பண்ணி அருளினவனே, மேன்மைக்கும் மென்மையாய் இருப்பவனே (பரம்பரனே) ! தாமரை மலரை ஒத்த நீண்ட திருகண்களை உடையவனே, மை போன்ற திருமேனி உடையவனே, செந்தாமரையில் பிறந்த பிராட்டிக்கு இருக்கும் இடமான உன் திருமார்பானது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஐஸ்வர்யங்களுக்கு குறிப்பாக திரு மகரக் குழைகளோடு கூடின திருக்காதுகளானவை மிகவும் விளங்க இருக்கும் ஐயனே, எனக்கு ஒருமுறை செங்கீரை (தாய்மார் முதலியோர் பிள்ளைகளை தாங்களே அசைத்து ஆடுவிக்கும் ஒரு நாட்டிய விசேஷம்) ஆடி அருள வேண்டும், இடையர்களுக்கு பவ்யமாகவும் போர் என்று வந்து விட்டால் ஒரு ரிஷபம் போல செருக்கில் இருப்பவனே, நீ ஆட வேண்டும், நீ ஆட வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

உயோகு துயில் என்பது, உலகங்களை எல்லாம் காப்பதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்து கொண்டு உறங்குவான் போல் யோகு செய்யும், ஆல மர இலையில் இருப்பதான ‘யோகநித்ரை’ என்பதாகும். செங்கீரை ஆடும் போது  திருமார்பில் இருக்கும் பிராட்டிக்கு அசைதல் உண்டாகாதபடி நிதானமாய் ஆட வேண்டும் என்கிறாள். திருமகளின் மணவாளனே கண்ணபிரானாக அவதரித்தான் என்பது விளங்கும்.

Leave a comment