மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி, * ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில், * பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான், * மாணிக்குறளனே தாலேலோ! வையம் அளந்தானே தாலேலோ!
சென்ற பதிகத்தில் எம்பெருமானின் திருவடி முதல் திருமுடி வரை யசோதை அனுபவித்ததை பாடிய ஆழ்வார், இந்த பதிகத்தில், யசோதை குழந்தையை தொட்டிலில் கிடத்தி, அவனது மேன்மையையும் எளிமையையும் பாடி தாலாட்டிய அனுபவத்தை ஆழ்வார் பாடுகிறார். எம்பெருமான் எந்த இடத்தில், எந்த விதத்தில், எந்த திருமேனியுடன் அவதரித்தாலும் அவனுடைய நிலையையும் அவனுடைய அசைவுகளையும் பிரம்மாதிகளே கண்டாலும் அனுபவிக்கத் தோன்றும் என்று சொல்லி, இதை யசோதை தனது மனோரதத்தில் கண்டதாக சொல்லி தாலாட்டு பாடியதை, மயர்வர மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார் தற்காலம் போல நேரடியாகக் கண்டு, மிகவும் உகந்து தாலாட்டுகிறார்.
பெரியாழ்வார் திருமொழி (1.4.1)
முதல் பாட்டு அண்டாதிபதியான பிரம்மா, இவனுடைய பருவத்திற்கு தகுந்த சிறு அன்பளிப்பை சொல்கிறது.
(இரண்டு பக்கமும்) மாணிக்கம் கட்டி, நடுவில் வைரத்தை காட்டியும், உயர்தர பொன்னால் செய்யப்பட்ட அழகிய சிறிய தொட்டிலை, பிரம்மாவானவன் உகந்து உனக்கு அனுப்பினான்; பிரம்மச்சாரியை வாமனனானவனே, தாலேலோ, உலகங்களை (த்ரிவிக்ரமனாய்) அளந்தவனே தாலேலோ என்பது இந்த பாட்டின் பொழிப்புரை.
இதற்கு மேல் மாற்றில்லை என்பது போன்ற தொட்டிலைப் பிரமன் கொண்டு வந்ததை சொல்லி தாலாட்டுகின்றாள். பொன்னில் செய்ததால் சிறியதாய், அழகானதாய் பருவதிற்கு தகுந்ததாய் உள்ள கட்டில் என்கிறார்.
உன்னுடைய பொருளை நீ பெறுவதற்காக யாசகம் வாங்கிய வாமனனே தாலேலோ, அப்படி பெற்ற உலகத்தை அளந்த விக்ரமனே தாலேலோ என்று பாடுகிறார்.
Leave a comment