தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய், * பொன் முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான், * என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மாமதீ * நின்முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப்போ.
பெரியாழ்வார் திருமொழி (1.5.1)
சென்ற பதிகத்தில் தொட்டிலில் குழந்தையின் பருவத்திற்கு ஏற்ற அழுகையை மாற்றி, கண்வளர பண்ணுவதற்காக தாலாட்டியதை பாடியவர் இந்த பதிகத்தில் கண்ணன் வளர்ந்து தொட்டில் பருவம் போய், தவழ்ந்து விளையாடத்தக்க பருவம் வந்ததால், குழந்தைக்காக சந்திரனை வா என்று கண்ணனின் மேன்மையும் எளிமையும் உணர்த்தும் வண்ணம், யசோதை கூப்பிடும் அனுபவத்தை ஆழ்வார் பாடுகிறார்.
தன் முகத்தில் (விளக்குகின்ற) சுட்டியானது பலகாலும் அசையும்படியாகவும் அழகிய முகத்தை உடைய கிண்கிணியானது (கணகண என்று ) ஒலிக்கும் படியாகவும் தவழ்ந்து போய் தெருப் புழுதியை அளைக்கின்றான். என் பிள்ளையான கோவிந்தனுடைய அழகிய சேஷ்டைகளை மிகவும் இளமை பொருந்திய சந்திரனே, உன் முகத்தில் கண்கள் உண்டு என்றால், நீ இங்கே பார்த்துப் போ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
யசோதை சந்திரனிடம் எனது குழந்தையாகிய இந்த கிருஷ்ணன் தனது நெற்றியிலே சுட்டி அசையவும், அரையிலே சதங்கை கிண்கிண் என்று சப்தமிடவும் தவழ்ந்து புழுதியில் விளையாடுவதை காண்பது தான், நீ கண் படைத்ததற்கான பயன் என்றும் இந்த விளையாட்டை காண நீ இங்கே வா என்று அழைக்கிறாள்.
திருமுக அழகிற்கு அழகு சேர்க்கும் வண்ணம் உள்ளது சுட்டி. குழந்தை தவழும் போது, அது தலை முடியுடன் சேர்ந்து ஆடுகிறது. பொன் முகத்து கிண்கிணி என்றது, அரையில் கட்டியிருக்கும் அழகிய முகத்தை உடைய கிண்கிணி ஆகும். அதுவும் குழந்தை தவழும் போது சபதம் இடும். இளம் மா மதி என்றது, இளமையால் மிக்க சந்திரன் என்பது ஆகும். கண்ணனுடைய இத்தகைய அழகிய லீலைகளை காண்பதற்கு நீ தாழ்ந்து நிற்க வேண்டும்; அது செய்யாது போகிற நீ, உன் முகத்தில் கண்கள் இருந்தால் கண் படைத்த பயன் பெறும்படி நீ இங்கே பார்த்து போ என்று யசோதை பாடுவதாக அமைந்த பாடல்.
Leave a comment