சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும், * எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஓவ்வாய், * வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற, * கைத்தலம் நோவாமே அம்புலீ கடி தோடிவா.
பெரியாழ்வார் திருமொழி (1.5.3)
சந்திரனே, ஒளியை உடைய மண்டலமானது நாற்புறமும் சுழன்று எல்லாத் திசைகளும் ஜோதிஸ்ஸாலே வியாபித்து எல்லாம் செய்தாலும், என் குமாரனுடைய திருமுக மண்டலத்திற்கு எந்த ஓரு விதத்திலும் ஒத்து வர மாட்டாய்; ஆச்சரியப் படத் தக்கவனாய் திருவேங்கட மலையில் எழுந்து அருளி இருக்கும்அவன் உன்னை உகந்து அழைக்கின்ற திருக் கைத்தலமானது நோவாதபடி மிகவும் விரைந்து நடை இட்டு வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘கானமும் வானரமும் வேடுமுடைவேங்கடம்‘ (நான்முகன் திருவந்தாதி 5.7)ல் சொல்லியபடி கானகம் வானரம் முதலியவற்றை ஆதரித்து, அழைக்கிற திருத்தலமாகிய திருவேங்கடமலையிலே நின்று வாழ்பவன் இந்த கண்ணபிரான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
வேகமாய் சென்ற சந்திரனைப் பார்த்து, இவன் எம்பெருமான், இவனை அலட்சியம் செய்தால் தப்ப முடியாது என்று சந்திரனுக்கும் நமக்கும் யசோதை கூறுவதாக அமைந்துள்ள பாடல்.
“அம்புலி கடிந்தோடிவா’’ என்று அழைக்கும் ஆழ்வார், யசோதை சந்திரனிடம் ஓடிவா என்று அழைத்த போதும், அவன் வராததால், சந்திரன் செருக்குடன் உள்ளான் என்று எண்ணி ‘அழகில் தன்னை ஒத்தவர் யாரும் இல்லை என்ற கர்வத்தினால் சந்திரன் வரவில்லை என்றும், நீ நாள்தோறும் தேய்ந்து வளர்ந்து களங்கத்துடன் உள்ளாய் என்றும், சந்திரனே ! நீ எப்போதும் பூர்ணமண்டலமாகவே இருந்து களங்கமும் நீங்கிச் செயற்கை அழகு செய்துகொண்டு விளங்கினாலும், என் குழந்தையினுடைய முகத்திற்குச் சிறிதும் ஒப்பாக மாட்டாய் என்றும், இவன் உன்னைக் கைகளால் அழைப்பதைப் பரம பாக்யமாக கொண்டு, விரைந்து ஓடிவா என்றும் வராவிட்டால் குழந்தைக்குக் கை வலிக்கும் என்றும் அந்த தவற்றை செய்யாதே என்றும் சொல்கிறாள்.
Leave a comment