திவ்ய பிரபந்தம்

Home

1.4.7 கானார் நறுந்துழாய் கை

கானார் நறுந்துழாய் கை செய்த கண்ணியும், * வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும், * தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள், * கோனே! அழேல்அழேல் தாலேலோ! குடந்தைக் கிடந்தானே தாலேலோ!

பெரியாழ்வார் திருமொழி 1.4.7

பிரம்மா, ருத்ரன், இந்திரன், வானுலக தேவதைகள், வயிச்சிரவணன் (குபேரன்), கடல் தேவதை வருணன் இவர்களுக்கு பிறகு, பெரிய பிராட்டியார் இவனுக்கு அளித்த அன்பளிப்பை சொல்கிறது.

தேன் நிறைந்துள்ள, செந்தாமரை மலர் மேல் உறைகின்ற பெரிய பிராட்டியார் காட்டில் உண்டான மணம் மிக்க திருத்துழாயாலே, கைத்தொழில் தோன்ற செய்த மாலையையும் ஆகாசம் முழுதும் நிறையும்படி செழுமை தங்கிய சோலை செய்து நிற்கிற கற்பகப் பூவாலே செய்த திரு நெற்றி மாலையையும் கொடுத்து அனுப்பினால்; சர்வ சேஷியானவனே, அழாதே கொள் ; அழாதே கொள் ; தாலேலே; திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்து அருளுபவனே, தாலேலோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஸ்ரீதேவி தாயார், தனது நிலத்தில் வளர்வதாலே சிறந்த பரிமளம் வீசுகின்ற, திருத் துழாயில், கைத்தொழில் தோன்ற விளங்கும் திருமாலையை அனுப்புகிறாள். திவ்ய மகிஷிகளில் பிரதானமான பெரிய பிராட்டியார் அனுப்பிய உபகாரத்தை சொல்லுகிறது. ஆகாசப் பரப்பு முழுவதும் நிறையும்படி அழகியதாய் சோலையில் இருக்கின்ற கற்பக பூவினால் செய்த திரு நெற்றி மாலையும் கொடுத்து விட்டாள்.

எல்லோரும் இவனுக்கு கொடுக்க வேண்டும் என்றபடி இருக்கும் சர்வ சேஷியாக இருப்பவனே, அழாதே உனக்கு தாலாட்டு என்கிறாள். அந்த மேன்மைக்கு எதிராக இருக்கும் நீர்மை தோன்ற குடந்தையில் பள்ளி கொண்டு இருப்பவனே, உனக்கு தாலாட்டு என்று பாடுகிறாள்.

Leave a comment