திவ்ய பிரபந்தம்

Home

1.4.8 கச்சொடு பொற்சுரிகை

கச்சொடு பொற்சுரிகை காம்பு கன வளை, * உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ, * அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள், * நச்சு முலையுண்டாய் தாலேலோ! நாராயணா அழேல் தாலேலோ!!

பெரியாழ்வார் திருமொழி (1.4.8)

பிரம்மா, ருத்ரன், இந்திரன், வானுலக தேவதைகள், வயிச்சிரவணன் (குபேரன்), கடல் தேவதை வருணன், பெரிய பிராட்டியார் இவர்களுக்கு பிறகு, ஸ்ரீ பூமி பிராட்டி, இவனுக்கு அளித்த அன்பளிப்பை சொல்கிறது.

திரு அரைப் பரியட்டத்தின் மேல் கட்டுகின்ற கச்சோடுகூட உடைவாளையும், சிறிய கீற்றுக்களை உடைய சேலையையும் பொன்னால் செய்யப்பட்ட தோள்வளைகளையும், திருமுடியின் மேல் சாத்தத்தக்க ரத்தினங்கள் இழைத்த திருநெற்றியில் சாத்தும் சுட்டியையும் ஒல்லிய தாளை உடைய ஒழுங்கான பொற் பூவையும், ‘அடுத்தாரை ஓரு காலும் நழுவ விடாதவனுக்கு’ என்று ஸ்ரீ பூமி பிராட்டியானவள் கொடுத்து அனுப்பினாள்; விஷமேற்றின (பூதனையின்) முலையை உண்டவனே, தாலேலோ, நாராயணா, அழாதே; தாலேலோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பூமாதேவி தாயார் சில ஆபரணங்களையும் ஆடையையும் கொடுத்து அனுப்பியதை சொல்லி தாலாட்டுகிறாள்.  அவனது அடியவர்களை ஒரு காலமும் நழுவ விடாதவனுக்கு (அச்சுதன்) பூமி பிராட்டி வரவிட்டாள். பூமிபாரத்தை குறைக்கும் வண்ணம், பூதனையை முடிக்க அவளுடைய நச்சு முலையை உண்டவனே உனக்கு தாலேலோ என்றும், உபயவிபூதியில் உள்ளவரும் அவனுக்கு கொடுத்து அனுப்ப வேண்டும் என்று இருக்கும், நாராயண சப்தத்திற்கு உரியவனே உனக்கு தாலாட்டு என்று பாடுகிறாள்.

Leave a comment