எழிலார் திருமார்வுக்கு ஏற்கும் இவையென்று, * அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு, * வழுவில் கொடையான் வயிச்சிரவணன், * தொழுது உவனாய் நின்றான் தாலேலோ! தூமணி வண்ணனே தாலேலோ!
பெரியாழ்வார் திருமொழி (1.4.5)
பிரம்மா, ருத்ரன், இந்திரன், வானுலக தேவதைகள் இவர்களுக்கு பிறகு, வயிச்சிரவணன் (குபேரன்), இவனுக்கு அளித்த சிறு அன்பளிப்பை சொல்கிறது.
அழகு விஞ்சி இருந்துள்ள பிராட்டி உறையும் திருமார்பில் சாத்துகைக்கு இவை பொருந்தி இருக்கும் என்று எண்ணி, அழகியதான பஞ்சாயுதமாகிற ஆபரணத்தையும் முத்து வடத்தையும் எடுத்துக் கொண்டு குற்றம் அற்ற, தானத்தை உடையவனான குபேரன், (இதைத் திருவுள்ளம் பற்ற வேண்டும் என்று) அஞ்சலி செய்து அதிக தூரத்தில் இல்லாமலும், மிக அருகில் இல்லாமலும் நடவில் நின்றான்; தாலேலோ, (ஓரு ஆபரணமும் வேண்டாதபடி இருக்கும்) பரிசுத்தமான நீல மணி போன்ற வர்ணத்தை உடைய கண்ணனே, தாலேலோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சிறு குழந்தைகளுக்கு எம்பெருமானுடைய பஞ்சாயுதங்களை கொண்டு கழுத்தில் அணியும் ஐம்படை என்ற ஒரு நகை செய்து அணிவது வழக்கம். அதனைக் குபேரன் கொண்டு வந்ததை சொல்லி தாலாட்டுகிறள்.
வழுவில் கொடையான் என்பது குறை இல்லாமல் கொடுப்பது. தானம் கொடுப்பதில் குறைகளாக சொல்வது, அரைகுறையாகக் கொடுப்பது, அஹங்காரத்தோடு கொடுப்பது, கைம்மாறு கருதிக்கொடுப்பது, கேட்டபின்பு கொடுப்பது, புகழை விரும்பிக் கொடுப்பது.
Leave a comment