என் சிறுக்குட்டன் எனக்கு ஓர் இன் அமுது எம்பிரான், * தன் சிறு கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான், * அஞ்சன வண்ணனோடு ஆடலாட உறுதியேல், * மஞ்சில் மறையாதே மா மதீ, மகிழ்ந்தோடிவா.
பெரியாழ்வார் திருமொழி (1.5.2)
எனக்கு தனித்துவமாய் மதுரமான அமிர்தம் போன்ற எனக்கு உபகாரகனான என் சிறு பிள்ளையானவன் தன்னுடைய சிறிய கைகளால் பலகாலும் உன்னையே காட்டி அழைக்கின்றான். கறுத்த வடிவை உடைய இப்பிள்ளைகளோடு விளையாடல் ஆட கருதினாயாகில் வடிவாலும் குளிர்த்தியாலும் உயர்ந்த சந்திரனே உகப்புத் தோற்ற கடுநடை இட்டு வா என்பது இந்த பாசுரத்தின் பொழிப்புரை.
சிறு குழந்தைகளை இடுப்பில் எடுத்துக் கொண்டு, நிலா நிலா ஓடி வா, என்று சொல்லி கையினால் அழைப்பதும், வழக்கம் ஆதலால் அப்படியே கண்ணபிரானும் அழைக்கிறான் என்கிறாள்.
என்னுடைய சிறு பிள்ளை, பருவத்தாலும் லீலைக்களாலும் எனக்கு ஒரு இனிதான அமிர்தம் போன்று இருப்பவன். என்பிரான் என்றது, எனக்கு மகனாக வந்து அவதரித்தது முதல் அவன் செய்யும் லீலைகளை அனுபவிக்க செய்வதும் எல்லாமே எனக்கு அவன் செய்யும் உபகாரங்கள் ஆகும். கண்டவர்கள் கண் குளிரும்படி இருக்கும் அஞ்சன வண்ணன் தன் சிறு கைக்கொண்டு, உன்னை அழைக்கிறான். மேகத்தில் சென்று மறையாமல், வடிவாலும், குளிர்ச்சியாலும் சிறந்த சந்திரனே, ‘நம்மை அழைக்க பெற்றோம்’ என்று உகந்து வேகமாக வா என்று அழைக்கிறாள்.
Leave a comment