அழகிய வாயில் அமுதம் ஊறல் தெளிவுறா, * மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான், * குழகன், சிரீதரன், கூவக் கூவ நீ போதியேல், * புழையில வாகாதே நின்செவி புகர் மா மதீ!
பெரியாழ்வார் திருமொழி (1.5.5)
தேஜஸ்சையும் பெருந்தன்மையையும் உடைய சந்திரனே, அழகான திருப்பவளத்தில் ஊறுகின்ற ஜலமாகிற அமிர்தத்தோடு கூடி உருத்தெரியாததாய் மழலைத் தன்மைக்கு உள்ள முற்றுதல் இல்லாதிருக்கிற இளம் பேச்சாலே உன்னை அழைக்கின்றான். எல்லாரோடும் கலந்து இருப்பவனும், பிராட்டியை திருமார்பிலே தரித்தவனுமான இவன் பலகாலும் அழைத்தும் நீ போவாயேயானால் உன் காதுகள் துளை இல்லாதவையாக ஆகாதோ (ஆகும் என்று கருத்து) என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
யசோதை சந்திரனிடம், உன்னைக் கூவி அழைக்கிற குழந்தையின் இனிய மழலைச் சொல் உன் காதில் விழவில்லையா, காது கேளாதாரைப் போல் இருக்கிறாய் என்றும், உடனே ஓடி வருவதே செவிக்குப் பலன் என்று மிரட்டுகிறாள்.
அழகிய திருப்பவளத்திலே ஊறுகின்ற ஜலம் ஆகிய அமிர்தத்தோடு கூட்டி, மழலையோடு இளம் சொல்லாலே உன்னை அழைக்கிறான் என்கிறார். எல்லோருடன் பொருந்தி இருக்கும் கலகலப்பு உடையவன். ஒரு முறை இல்லாமல் பல முறையும் அழைக்க, காது கேளாதாரை போல நீ போவதால், உன் செவியில் துளை இல்லாததாகாதோ என்கிறாள்.
Leave a comment