சீதக் கடல் உன் அமுதன்ன தேவகி, * கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த * பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும், * பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே.
சென்ற பதிகத்தில் கண்ணனின் அவதாரத்தை பாடிய ஆழ்வார், இந்த பதிகத்தில் யசோதை திருவடிகளில் இருந்து திருமுடி வரை அனுபவித்ததை பரிவுடன் சொல்லி இருக்கிறார்.
பெரியாழ்வார் திருமொழி 1.3.1
குளிர்ந்த கடலில் உள்ள அமுதமாகப் பிறந்த பிராட்டியோடு ஒத்த தேவகிப் பிராட்டி பூமாலையால் அலங்கரிக்கப்பட்ட கேசபாசத்தை உடைய யசோதைப் பிராட்டிக்கு போகவிட்ட பேதமையை உடைய சிசுவானது (திருக்கைகளால்) பிடித்து சுவைத்து, (திருப்பவளத்தில் வைத்து) உண்ணும் திருவடித்தாமரைகளை வந்து காணுங்கள்; பவளம் போல சிவந்த அதரத்தை உடைய பெண்களே, வந்து பாருங்கள்; காணீரே என்று இரண்டு முறை கூறியது ஆதரத்தின் மிகுதியால். இது இந்த பாடலின் பொழிப்புரை.
ஆழ்வார்களும் ‘‘தேனே மலரும் திருப்பாதம்’’ (திருவாய்மொழி 1.5.5) என்கிறார்கள். இப்படிப்பட்ட தனது திருவடிகளில் உள்ள தேனைப் பருகுவதற்காகவும், ‘வையம் ஏழும் கண்டாள்‘ (பெரியாழ்வார் திருமொழி 1.1.6) என்கிறபடி, தனது திருவயிற்றில் கிடக்கும் உலகங்களுக்கு எல்லாம் உஜ்ஜீவனம் உண்டாகும் விதம் கிருஷ்ணன் தனது திருவடிகளில் ஒன்றை எடுத்து வாயிலே வைத்துச் சுவை பார்த்துக் கொண்டிருக்க, அவனின் திருப்பாதக் கமலங்களைப் பாருங்கள் என்று யசோதை அழைக்கும் பாடல்.
குளிர்ச்சி மாறாத சமுத்திரத்திலே தேவ போக்கியமாகப் பிறந்த அமிர்தம் புற அமுதாம்படி ‘அமுதில் வரும் பெண்ணமுது’ என்கிறபடியே உள் அமுதாகப் பிறந்த பிராட்டியோடு ஒத்த தேவகிப் பிராட்டி என்கிறார். இருவரும் பரோபகாரத்தில் சீலை என்கிறார்.
Leave a comment