விண்கொள் அமரர்கள் வேதனை தீர முன் * மண் கொள் வசுதேவர் தம் மகனாய் வந்து, * திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான், * கண்கள் இருந்த வா காணீரே கனவளையீர் வந்து காணீரே.
பெரியாழ்வார் திருமொழி (1.3.16)
திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகள், சிறுகுழந்தையின் குறி, திருமருங்கு, திருஉதரம், திருமார்பு, திருத் தோள்கள், திருக்கைதலங்கள், திருக்கழுத்து, திருவதரம், திருமுகமண்டலம் இவைகளுக்குப் பிறகு இந்த பாடலில் திருக்கண்களின் அழகை அருளிச் செய்கிறார்.
அவதார பிரயோஜனம் சாதுக்களை காப்பாற்றுவதற்காக என்பதால் மேல் உலகத்தில் உள்ளவர்கள் குறை தீர, வசுதேவர் மகனாக வந்து பிறந்து, வலிமையான அசுரர்களை அழித்து வளரும் கண்ணனின் திருக்கண்களை காண வாரீர் என்று அழைக்கிறாள்.
ஸ்வர்க்காதி லோகங்களை இருப்பிடமாக உடைய இந்த்ராதி தேவதைகளின் துன்பமானது தீரும்படியா, முன்னே பூமியை இருப்பிடமாக உடைய வாசுதேவருக்கு மகனாய் வந்து திருவவதாரம் செய்து வலிமை கொண்ட அசுரர்கள் அழியும்படி வளர்கின்ற கண்ணனுடைய திருக்கண்கள் இருந்த அழகை காணுங்கள் ; பொன் வளையை உடைய பெண்களே, வந்து காணீர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தன்னை பற்ற வசுதேவரை சிறை வைத்திருந்ததில் இருந்து அவருடைய துக்கத்தை பூ உலகில் அவதரித்து போக்குகிறான். பின்னர் தேவர்களுடைய துக்கங்களை தீர்க்கிறான். ‘தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல்’ (பெரிய திருமொழி 8.5.1) என்னும்படி அவதரித்தான்.
இவன் வளர்வது, மனோ பலமும் தேக பலமும் உடையவரான அசுரர்களும் அவர்கள் குலமும் அழிந்து போகும் படி உள்ளது என்கிறார். இப்படி அனுகூல ரக்ஷணமும், பிரதிகூலர்கள் அழிவதும் பண்ணும் இடத்தில், இவர்களை தழைக்கவும், அவர்களை அழிக்கவும் செய்யும் திருக்கண்கள் இருக்கின்ற அழகை காண வாருங்கள் என்று பொன் வளை உடைய பெண்களை அழைக்கிறார்.
Leave a comment