வந்த மதலைக் குழாத்தை வலி செய்து, * தந்தக் களிறுபோல் தானே விளையாடும், * நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய, * உந்தி இருந்தவா காணீரே ஒளியிழை யீர்வந்து காணீரே.
பெரியாழ்வார் திருமொழி (1.3.8)
திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகள், சிறுகுழந்தையின் குறி, திருமருங்கு இவைகளுக்குப் பிறகு இந்த பாடலில் உந்தி.
தன்னோடு விளையாட வந்த சிறு பிள்ளைகளின் கூட்டத்தை பலாத்கரித்து (குவிந்த) கோம்பை உடைய யானைக் குட்டி போல தானே (முக்கியத்துவம் வாய்ந்தவனாக) விளையாடும், நந்தகோபன் குமரன் கண்ணனுக்கு மிகவும் அழகிய திரு நாபி இருக்கிறபடியை காணுங்கள் ; காந்தி மிக்க ஆபரணங்களை உடைய பெண்களே வந்து காணீர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணன் சிறு குழந்தையாய் இருந்தாலும் தன்னோடு விளையாடுவதற்குக் கூட்டமாய் வரும் பாலகர்களை எல்லாம் தனது வல்லமையால் அடக்கி, தான் மட்டும் முக்கியமாய் நின்று, கொம்பு முளைத்த யானைக்குட்டியை போல இருப்பவனின் உந்தியை காண வாரீர் என்று அழைக்கிறாள்.
இப்படி விளையாடும் கண்ணன், நந்தகுமாரன் முன் வினயமாக விளையாட்டு பிள்ளைத்தனத்தை உடையவன் என்றும் குறிப்பிடுகிறார்.
Leave a comment