வண்டு அமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் * கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு, * அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய, * கண்டம் இருந்த வா காணீரே காரிகையீர் வந்து காணீரே.
பெரியாழ்வார் 1.3.13
திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகள், சிறுகுழந்தையின் குறி, திருமருங்கு, திருஉதரம், திருமார்பு, திருத் தோள்கள், திருக்கைதலங்கள் இவைகளுக்குப் பிறகு இந்த பாடலில் திருக் கழுத்தின் அழகை அருளிச் செய்கிறார்.
வண்டுகள் படிந்திருக்கின்ற பூவோடு கூடிய கூந்தலை உடையவளான யசோதை பிராட்டியானவள் (தன்னுடைய) மகனாக ஸ்வீகரித்து கொண்டு வளர்கின்ற நந்தகோபன் குமரனுக்கு, அண்டங்களையும் (அவற்றில் உள்ள கிடக்கின்ற) அனைத்து ஜீவராசிகளையும் முழுவதும் விழுங்கிய திருக்கழுத்து இருந்த நிலையை காணுங்கள் என்று அழகிய பெண்களை அழைக்கிறாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
அவள் தன் மகன் என்றே இருந்தாலும், ஆழ்வாருக்கு தெரிந்ததால், ‘மகனாகக் கொண்டு’ என்று கூறுகிறார்.
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய என்று கூறியது, அண்டமும் அதில் வசிக்கின்ற சேதனம், அசேதனம் என்ற எல்லாவற்றையும் சேர்த்து விழுங்கியதை சொல்கிறார்.
Leave a comment