திவ்ய பிரபந்தம்

Home

1.3.12 மைத் தடங்கண்ணி யசோதை

மைத் தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை, நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய, கைத் தலங்கள் வந்து காணீரே கனங் குழையீர் வந்து காணீரே.

பெரியாழ்வார் திருமொழி 1.3.12

திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகள், சிறுகுழந்தையின் குறி, திருமருங்கு, திருஉதரம், திருமார்பு, திருத் தோள்கள் இவைகளுக்குப் பிறகு இந்த பாடலில் திருக்கைதலங்கள்.

கறுத்து விசாலமான கண்களை உடைய யசோதை பிராட்டி வளர்க்கிற உயர்ந்த வயலில் கருநெய்தல் பூவின் நிறத்தை உடையவனாய் சிறிய பிள்ளையின் கூரியதான நுதியை உதியா திருஆழியும் திருச்சங்கும் அமைந்துள்ள திருக்கைத் தலங்களை வந்து காணுங்கள் ; பொன்னால் செய்த காது ஆபரணங்களை உடைய பெண்களே வந்து காணீர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மையிட்டு, கறுத்து, பெருத்து, விசாலமாக அமைந்துள்ள கண்களை பெற்ற யசோதை வளர்க்கிற, கரு நெய்தல் பூவின் நிறம் உடைய சிறிய பிள்ளையின் திரு ஆழியும் திரு சங்கும் அமைந்து உள்ள திரு கைத் தலங்களை காண வாரீர் என்று பொன் ஆபரணங்களை அணிந்த பெண்களை அழைக்கிறாள்.

இப்படி கண்ணழகை உடைய யசோதை பிராட்டி, வைத்த கண் வாங்காமல் நோக்கி வளர்க்கிற கண்ணனை, வளர்ப்பவர்கள் இன்னும் இருந்தாலும், அவர்கள் கையில் கொடுக்காமல், யசோதை தானே வளர்ப்பவள் ஆவாள். அவனை சீராட்டி வளர்த்த வளர்ப்பு எல்லாம் அவனுடைய திரு நிறத்தில் தோன்றும்படி வளர்த்ததை சொல்கிறார்.

நெய்த்தலை நேமியும் என்று சொன்னது, கூரிய பற்களை உடைய என்று ஒரு அர்த்தம். நேமி, ஆயுதம் ஆகையால் நெய் தடவி அணிந்து இருக்கும் சக்கரம் என்று அர்த்தம் கொள்ளலாம். ‘கையெல்லாம் நெய்’ (பெரிய திருமொழி 10.3.3) என்கிற கை ஸ்பரிசத்தாலே நெய் சுவடு மாறாத திருவாழி என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

கருது இடம் பொருது வந்து (திருவாய்மொழி 10.6.8) கையில் நிற்கின்ற நேமி போல இல்லமால், தன் சப்தத்தினாலேயே எதிரிகளை அழிக்கவல்ல பாஞ்சசன்னியமும் எப்போதும் இருக்கின்ற சேர்த்தியை இவளுக்கும் அவ்வப்போது காட்டி இருக்க கூடும் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

Leave a comment