முற்றிலும் தூதையும் முன் கைம்மேல் பூவையும், * சிற்றில் அழைத்துத் திரி தருவோர்களை *பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன் தன் * நெற்றி இருந்தவா காணீரே நேரிழையீர் வந்து காணீரே.
பெரியாழ்வார் திருமொழி 1.3.19
திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகள், சிறுகுழந்தையின் குறி, திருமருங்கு, திருஉதரம், திருமார்பு, திருத் தோள்கள், திருக்கைதலங்கள், திருக்கழுத்து, திருவதரம், திருமுகமண்டலம், திருக்கண்கள், திருப்புருவங்கள், திருமகரக்குழைகள் இவைகளுக்குப் பிறகு இந்த பாடலில் திரு நெற்றியின் அழகை அருளிச் செய்கிறார்.
சிறிய மணல் வீடுகளை கட்டி திரிகின்ற பெண்களுடைய (மணல் கொழிக்கிற) சிறு முறம், (மணல் சோறுஆக்கிற) சிறு பானைகளையும் முன் கை மேல் நின்று விளையாடுகிற நாகனைவாய்ப் புள்ளையும், கையைப் பிடித்து, பறித்து கொண்டு ஓடும், (தீம்பில்) தலைவன் ஆன (எம்பெருமானாகிய கண்ணனின்) திரு நெற்றியை காண வாரீர்; நுண்ணிய ஆபரணங்களை அணிந்த பெண்களே வந்து காணீர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
Leave a comment