திவ்ய பிரபந்தம்

Home

1.3.2 முத்தும் மணியும் வயிரமும்

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும், * தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும், * பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள், * ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்து காணீரே.

பெரியாழ்வார் திருமொழி 1.3.2

இந்த பதிகத்தின் முதல் பாடலில் திருவடிகள், இங்கே திருவடிக்களின் திருவுகிருடனே திரு விரல்களை அனுபவிக்கிறார்.

முத்துக்களையும் ரத்தினங்களையும் வைரத்தையும் நல்ல பொன்னையும் மாறி மாறிப் பதித்து சேர்ந்தாற்போல் எங்கும் மணி போன்ற வர்ணத்தை உடைய கண்ணனுடைய திருவடிகளில் உள்ள விரல்கள் பத்தும் சேர்ந்து இருந்தபடியை காணுங்கள் ; அழகிய நெற்றியை உடைய பெண்டிர்காள் வந்து பாருங்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கோமேதகம், நீலம், பவழம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன நவரத்தினங்கள்.

கால்களுக்கு இடுகின்ற மருதாணி போல ஸ்ரீகிருஷ்ணனுடைய பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணங்களையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும் யசோதை இட்டு ‘என் மணிவண்ணனுடைய பாதங்களில் பத்து விரலும் ஒளியுடன் விளங்குவதை காண வாருங்கள் என்கிறாள்.

Leave a comment