மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை, * சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில், * அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன், * முத்த மிருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே.
பெரியாழ்வார் திருமொழி (1.3.6)
திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகளுக்குப் பிறகு இந்த பாடலில் சிறுகுழந்தையின் குறி ;
மத்த கஜங்களை உடைய வசுதேவருடைய இதயத்தைப் பிரியாத தேவகி பிராட்டியின் வயிற்றிலே ஹஸ்த நக்ஷத்திரத்திற்குப் பத்தாவது நாள் திருஅவதாரம் செய்த அடுத்தாரை நழுவ விடாத கண்ணனுடைய குறி (சன்னம்) இருந்த படியை காணுங்கள், மந்தஸ்மிதமுடைய பெண்கள் வந்து காணீர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ஹஸ்த நக்ஷத்திரத்திற்குப் பத்தாவது நாள் திருஅவதாரம் செய்த கண்ணன் என்கிறார். ஹஸ்த நக்ஷத்திரத்திற்குப் பத்தாவது நாள், கீழ்முறையில் எண்ணிப்பார்த்தால், கண்ணனின் ரோஹிணீ நக்ஷத்ரமும், மேல்முறையில் எண்ணிப் பார்த்தால், நாராயணனின் திருவோண நக்ஷத்திரம் வரும். அதனால் எம்பெருமானுக்கு தீங்கு செய்ய நினைப்பவர்கள் தடுமாறுவார்கள்.
இப்பாட்டில் கண்ணனின் முத்தம் என்றது. சிறுகுழந்தைகளின் குறியைப் பேரன்புடையார் முத்தமிடுவார்கள் என்னும் காரணத்தால் அதற்கு முத்தம் என்று பெயர் என்று கூறுவாரும் உண்டு.
Leave a comment