மண்ணும் மலையும் கடலும் உலகேழும், * உண்ணுந் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு, * வண்ண மெழில் கொள் மகரக் குழையிவை * திண்ணம் இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே.
பெரியாழ்வார் திருமொழி 1.3.18
திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகள், சிறுகுழந்தையின் குறி, திருமருங்கு, திருஉதரம், திருமார்பு, திருத் தோள்கள், திருக்கைதலங்கள், திருக்கழுத்து, திருவதரம், திருமுகமண்டலம், திருக்கண்கள், திருப்புருவங்கள் இவைகளுக்குப் பிறகு இந்த பாடலில் திரு மகரக் குழையின் அழகை அருளிச் செய்கிறார்.
பூமியையும், மலைகளையும், கடல்களையும் உலகங்கள் ஏழிணையும் பிரளய காலத்தில் திருவயிற்றில் வைத்து உண்ணும், (அவற்றை காப்பாற்றும் பொருட்டு) மகிழ்ந்த பாலனின் (திருமேனிக்கு பொருத்தமான) அழகிய திரு நிறம் கொண்ட திருமகர குழைகளின் திண்மையை காணுங்கள் ; அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்களே காண வாரீர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
Leave a comment