பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்துண்டிட்டு, * உறங்குவான் போலே கிடந்த இப் பிள்ளை, * மறங்கொள் இரணியன் மார்பை முன் கீண்டான், * குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே.
பெரியாழ்வார் திருமொழி 1.3.5
திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்களுக்குப் பிறகு இந்த பாடலில் திருதொடைகள் ;
முற்காலத்தில் துவேஷம் கொண்ட ஹிரண்யனுடைய மார்பினை பிளந்தவனாய், (கொடுமையால் வந்த) பிரகாசத்தை உடைய பூதனையின் முலையை (பசை அறும்படி) சுவைத்து, உண்டு, ஒன்றும் அறியாதவன் உறங்கும்படி கிடந்த இந்த பிள்ளையின் திருத் தொடைகளை வந்து காணுங்கள் ; குவியும் முலைகளை உடைய பெண்கள் வந்து காணீர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கிருஷ்ணனை கொல்லும் பொருட்டு பூதனை என்னும் ராக்ஷஸி, தூங்கிக் கொண்டிருந்த போல இருந்த கிருஷ்ணனுக்கு தனது விஷம் தடவின முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, குழந்தை அவ்வரக்கியை கைகளால் இறுகப் பிடித்துத் பாலுண்கிற பாவனையில் அவள் உயிரையும் உறிஞ்சி கொன்றார். உறங்குவான் போல் என்பது இங்கே, இவன் செய்த பராக்கிரமம் ஒன்றும் தெரியாதபடி என்று கொள்ளவேண்டும். நரசிம்ம அவதாரம் செய்த நாராயணனே கிருஷ்ணனாக அவதாரம் செய்த இந்த கண்ணனின் தொடை அழகை காண வாரீர் என்கிறாள்.
Leave a comment